Home » வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தொடர்பில் கிராமிய மட்டத்தில் விழிப்பூட்ட நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தொடர்பில் கிராமிய மட்டத்தில் விழிப்பூட்ட நடவடிக்கை

- வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

by Rizwan Segu Mohideen
September 8, 2023 4:18 pm 0 comment

வெளிநாடு செல்லும் பணியாளர்கள் பிரயோகரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறியை தொடர்வதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிகூடிய வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டம் அண்மையில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

இதில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குறிப்பிடுகையில், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், கள அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் விழிப்பூட்டும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய கையேடு ஒன்றை தயாரித்துள்ளதாகவும், அதனை அச்சிட்டும், இணையத்தின் ஊடாகவும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கிராமிய மட்டத்திலான நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையுடன் தொடர்புபடும் போது சரியான மற்றும் குறிப்பான தகவல்களைப் பெறுவதில் சிக்கல் இருப்பதால் போலி நிறுவனங்கள் மற்றும் முகவர்களின் முறைகேடான செயற்பாடுகளுக்கு அகப்படுவதால் அவர்களின் நேரமும் நிதியும் வீணடிக்கப்படுவதாக குழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது. அதனால் இந்த வேலைத்திட்டத்தை நீண்ட காலத்துக்கு மேற்கொள்ள வேண்டும் என குழுவின் தலைவரினால் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, ஊழியர் சேமலாபா நிதியத்தின் முதலீட்டுத் தீர்மானம் எடுக்கும் போது தொழில் அமைச்சின் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது முக்கியமானது என குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பைசல் காசிம், எஸ்.எம். மரிக்கார், இஷாக் ரஹுமான், சமன்பிரிய ஹேரத், காமினி வலேபொட மற்றும் வேலு குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், நிதி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் பிரதி திறைசேரி செயலாளர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT