Sunday, May 12, 2024
Home » நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்

– சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரே கொள்கையை பின்பற்றுவோம்

by Rizwan Segu Mohideen
September 8, 2023 10:07 am 0 comment

– எப்பாவல மத்திய கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நேற்று (07) நடைபெற்ற, எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது ஆண்டுபூர்த்தி விழா நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறையானது உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக அமையும் வகையில் வடிவமைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், விரைவான கல்வி சீர்திருத்தங்கள் மூலம் மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைவமையில் கல்லூரியின் 150 வது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

எப்பாலை ஸ்ரீ சித்தார்த்த கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதலாவது வருகையை நினைவுகூறும் வகையில் விருந்தினர் பதிவேட்டில் ஜனாதிபதி பதிவிட்டார்.

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நினைவுப் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டதோடு, ஆசிரியர்கள் குழாமுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்றும் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமாக வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க என்னை அழைத்தார். பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்ததால் அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, நிதி இராஜாங்க அமைச்சர் என்னுடன் இங்கே வருகை தந்தார். இக்கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் பல நாட்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை காணக்கூடியதாக உள்ளது.

நான் முன்னர், இந்தக் கல்லூரிக்கு வந்தபோது, மத்திய மகா வித்தியாலமாக மாற்ற நடவடிக்கை எடுத்தேன். மேலும், இன்று நான் இங்கு வந்தபோது, கல்லூரிக்கு பற்றாக்குறையாக உள்ள பிரதான கேட்போர்கூடக் கட்டிடத்தை வழங்க முடிவு செய்தேன்.

இக்கல்லூரி வட மத்திய மாகாணத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றாகும். இந்தக் கல்லூரி 1872 இல் நிறுவப்பட்டபோது, வட மத்திய என்ற பெயரில் மாகாணம் ஒன்று இருக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், 150 ஆண்டுகளில் இந்தக் கல்லூரி வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.

கல்வி சீர்த்திருத்தத்துக்கான வெள்ளைப் (கொள்கைப்) பத்திரம் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் போது கல்வி அமைச்சராக நான் அன்று இந்தக் கல்லூரிக்கு வந்தேன். அதன்படி, அன்றும் இங்கு இருந்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இப்போது சுமார் 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது நாம் புதிதாக கல்வி பற்றி சிந்திக்க வேண்டும். இன்று நாம் ஒரு புதிய யுகத்தில் இருக்கிறோம்.

அன்று நான் இந்தப் பகுதிக்கு வந்தபோது இங்கு மின்சாரம் வழங்கும் பணி தொடங்கப்பட்டிருந்தது. மகாவலி மற்றும் ஜய கங்கை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் அந்த வசதிகள் வந்தன. ஆனால் அன்று, இந்தப் பிரதேசத்தில் வீட்டுகளுக்குக் கூட தொலைபேசி இருக்கவில்லை. இன்று இவர்கள் அனைவரது கைகளிலும் கைபேசி உள்ளது. இன்று நாம் நவீன உலகில் வாழ்கிறோம்.

மேலும் 20 – 30 ஆண்டுகளாகும்போது இதனை விட பாரிய மாற்றங்கள் உலகில் நிகழும். நவீன தொழில்நுட்பம் கிடைத்துள்ளது. பிளொக்செயின், செயற்கை நுண்ணறிவு, ஜெனொம் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தின் மூலமும் உலகம் வேகமாக மாறி வருகிறது. மேலும் விவசாயம் நவீனமயமாகி வருகிறது. அந்த மேம்பட்ட உலகத்துடன் முன்னேற நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படியானால், தற்போதைய கல்வி முறை அதற்கு ஏற்றதல்ல. நாம் புதிதாக சிந்தித்து புதிய வழியில் முன்னேற வேண்டும்.

இதற்கான பணிகளை கல்வி அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். இந்தக் கல்வி சீர்திருத்தங்களுக்கு வெளிநாட்டு உதவி பெறுவது உள்ளிட்ட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. நிதியமைச்சர் என்ற ரீதியில் இந்த நாட்டில் அதிகளவு பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகள் குறித்தும் அந்த வேலைத்திட்டங்கள் குறித்தும் நாம் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளோம். நாம் கடந்த வாரம் கல்வி அமைச்சிடம் இருந்து அந்த அறிக்கையைப் பெற்றோம்.

பாடசாலைக் கல்வி, நிர்வாகம், உயர்கல்வி ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்தக் குறைபாடுகளை எம்மால் நிராகரிக்க முடியாது. அந்த குறைபாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, புதிய கல்வி முன்மொழிவு தயாரிக்கப்பட வேண்டும்.

அத்துடன், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவின் கீழ் கல்வி தொடர்பான மற்றுமொரு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிக்கைகள் மற்றும் ஏனைய பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் இந்தப் பணிகளைத் தொடங்க தயாராகி வருகிறோம். மேலும், எதிர்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்பக் கல்வி குறித்து தொழில்நுட்ப அமைச்சுடன் நாம் கலந்துரையாடிள்ளோம்.

இன்று இந்நாட்டுப் பாடசாலைகளில் சில மாணவர்கள் கலைப் பட்டம் பயின்று வருகின்றனர். மற்றொரு பகுதியினர் விஞ்ஞானம் கற்கின்றனர். கலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. மேலும் விஞ்ஞானம் கற்க விரும்புவோருக்கு அந்த வாய்ப்பு போதிய அளவில் கிடைப்பதில்லை. இது தொடர்பில் அவதானம் செலுத்தி நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

குறைந்தபட்சம் அந்த தொழில்நுட்பம் சார்ந்த 05 பல்கலைக்கழகங்களையாவது நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை போல அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான பல்கலைக்கழகமொன்றில் 25,000 பேர் உள்ளனர். இதற்காக 05 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். NSBM இனை மேற்கூறிய பல்கலைக்கழகமாக நடத்திச் செல்லவுள்ளோம். SLTC, SLIIT, Royal Institute போன்ற பட்டப்படிப்பு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களை போலவே செயற்படுகின்றன.

சில பல்கலைக்கழகங்களில் பதிவுக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இணைந்துக்கொள்ள மாணவர்களுக்கு சலுகைக் கடன்களைப் பெற்றுத்தருவோம். அவற்றை 10-15 வருடங்களில் மீளச் செலுத்தவும் முடியும். அத்தோடு மேற்படி அனைத்துப் பட்டப்படிப்பு நிறுவனங்களையும் தொழில்வாய்ப்புக்களை இலக்கு வைத்த நிறுவனங்களாக மாற்றியமைக்க வேண்டியதும் அவசியமாகும்.

புதிய மருத்துவ பீடம் ஒன்றை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பும் உள்ளது. நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் அந்த கல்வி வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதேபோல் புதிய தொழில்நுட்ப தெரிவுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

கலை பாடங்களை கற்பதால் சில பீடங்களுக்கு செல்வதற்கு தடையிருக்க கூடாது என நினைக்கிறேன். கலை, விஞ்ஞானம் என்ற பிரிவுகள் இன்றி, மாணவர்களுக்கு இரண்டு துறைகளையும் சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்கான ஆசிரியர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.

அடுத்த 10 வருடங்களில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில அறிவை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக ஆங்கில ஆசிரியர்களையும் பயிற்றுவிப்போம். ஆங்கிலம் மாத்திரமின்றி ஹிந்தி, சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஜேர்மன், இத்தாலி மொழி அறிவையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு உகந்த வகையில் கல்வித் திட்டத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.

முன்னர் மாணவர்களுக்கு டெப் கனிணிகளை வழங்குவது பற்றி பேசியிருந்தோம். இருப்பினும் அது மட்டும் போதுமானதல்ல. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு AI தொடர்பில் அதிகளவில் பேசப்படுகின்றன. ஆசியர்களுக்கு மேலதிகமாக கற்பித்தல் செயற்பாடுகளுக்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 1989 இல், தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்து “அசோசியேட்” பட்டம் (Associate degree) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அக்காலத்தில் இருக்கவில்லை. அதனை தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன். அதேபோல் இரு வருடகால பயிற்சி காலத்துடன் அதனை செயற்படுத்துவதற்காக தொழில்நுட்ப பீடங்களையும் ஆரம்பிக்கும் இயலுகை எமக்கு கிட்டும்.

தற்போது நமது நாட்டில் 500 தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தையும் தொழில்சார் பல்கலைக்கழங்களாக மாற்றியமைக்க வேண்டும். கல்வி அறிவு மட்டுமின்றி விளையாட்டு, கலாச்சாரம் சார்ந்த செயற்பாடுகளுடன் கூடிய எதிர்காலத்திற்கு அவசியமாக அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இலங்கை உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். கல்விக் கொள்கையை அரசியலுக்கு அடிபணிய இடமளிக்ககூடாது. மேலும் அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவும் இடமளிக்க கூடாது. கல்விக் கொள்கையை சட்டமாக்கி அதனை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் சித்தார்த்த மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி கஸ்தூரி அனுராதநாயக்க,

”இந்நாட்டு கல்வி மேம்பாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரலாற்றில் இடம்பிடிக்கும். கல்வியற் கல்லூரிகள், ஆசிரிய பீடங்களை ஆரம்பிக்க பாரிய சேவைகளை செய்தார். இன்று அவர் 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்க முயற்சிக்கிறார். எதிர்கால உலகத்தின் கதவுகள் பிள்ளைகளுக்கு திறக்கப்படுவதற்கு அவசியமான தொழில்நுட்ப கல்வி அறிகை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத், கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி அதிபர் ஜனக ஹேரத் உள்ளிட்டவர்களோடு மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT