Home » காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கை துண்டிப்பு

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கை துண்டிப்பு

- யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

by Prashahini
September 4, 2023 2:23 pm 0 comment

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த யாழ், இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 03 கல்வி கற்கும் 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின் போது மறுநாள் (26) , சிறுமியின் கையில் “கனுலா” (குளுக்கோஸ், மருந்துகள் ஏற்றுவதற்காக மணிக்கட்டின் கீழ் பொருத்தப்படும் ஊசி) பொருத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்து (அன்டி பயோடிக்) ஏற்றப்பட்டுள்ளது.

“கனுலா” உரிய வகையில் சிறுமியின் கையில் பொருத்தாததால், சிறுமிக்கு வலி ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் சிறுமி கூறிய போதிலும் தாதியர்கள், ஊசி ஏற்றினால் வலிக்கும் என கூறி அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

அந்நிலையில் சிறுமியின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, கையின் மணிக்கட்டின் கீழ் செயலிழந்துள்ளது. அதனால் சிறுமியின் கையை மணிக்கட்டுடன் அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டதை அடுத்து , சிறுமியின் கை தற்போது அகற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி தெரிவிக்கையில் ,

சிறுமியின் கை அகற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் நான் மிக மனம் வருந்துகிறேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ஊடாகவும், எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளேன். சுகாதார அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் உத்தரவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமது பிள்ளையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT