Home » நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

- மேல், சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு

by Prashahini
August 31, 2023 8:57 am 0 comment

– பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலையில் மழை

– காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்று (31) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (31) நண்பகல் 12.11 அளவில் அடப்பன் குளம் (வவுனியா மாவட்டம்), துட்டுவெவ (அனுராதபுரம் மாவட்டம்) மற்றும் நிலாவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT