Saturday, May 18, 2024
Home » சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குழு

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குழு

- பிரதேச மீனவர்களால் சுற்றிவளைப்பு

by Prashahini
August 25, 2023 4:25 pm 0 comment

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கல்குடா கடலில் சட்டவிரோதமான மீன் பிடி முறையான சுருக்கு வலை மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் மீனவக் குழுவொன்று இன்று (25) பிரதேச மீனவர்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு உரிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

இந் நடவடிக்கையின் போது 36 மீனவர்கள், 10 படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் தங்களால் கைப்பற்றப்பட்டு கல்குடா பொலிஸ் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பேத்தாழை மீனவ சங்கத் செயலாளர் பிரான்சிஸ் ரமேஸ்பாலு தெரிவித்தார். மாங்கேணி,காயான்கேணி, வட்டவான், நாசிவன் தீவு ஆகிய மீன் பிடி கிராமங்களைச் சேர்நதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்த இந்நடவடிக்கை குறித்து உரிய மீனவர்களுக்கு தங்களால் பலமுறை அறிவித்தல் விடுத்தபோதிலும் இச்சட்ட விரோத நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை இவர்கள் மீதான சுற்றி வளைப்பை தாங்கள் மேற்கொள்ள நேரிட்டதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருக்காது என மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக பிரதேச கடலில் வெளிமாவட்ட, உள்ளுர் மீனவர்கள் வருவதனால் தங்களது வழமையான மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதரமும் பாதிக்கப்படுள்ளதாக கவலை தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் முன் வந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டு சுருக்குவலை மீன் தொழிலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தங்களைப் போன்று மாவட்டத்திலுள்ள மீன் பிடி சங்கங்கள் முன் வந்து இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

குறித்த மீன் பிடி சங்கத்தின் செயற்பாட்டை பிரதேசத்தில் பலரும் பாராட்டினார்கள்.

பாசிக்குடா நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT