Tuesday, May 14, 2024
Home » வாக்னர் கூலிப்படை தலைவர் விமான விபத்தில் மரணம்

வாக்னர் கூலிப்படை தலைவர் விமான விபத்தில் மரணம்

- விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
August 24, 2023 11:19 am 0 comment

ரஷ்யாவில் இயங்கி வந்த தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கனி ப்ரிகோசின் (Yevgeny Prigozhin) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவின் வடமேற்கு பகுதியில் அவர் உள்ளிட்ட சிலர் பயணித்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று (23) இடம்பெற்ற குறித்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், அதில் வாக்னர் (Wagner) குழுவின் தலைவரான யெவ்கனி பிரிகோசினும் ஒருவர் என, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ஜனாதிபதிக்கு மிகவும் வேண்டப்பட்ட அமைப்பாக கருதப்பட்ட தனியார் இராணுவம் ஒன்றான வாக்னர் குழு, உக்ரைனில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிட்டு வந்த நிலையில், போரை எப்படி நடத்துவது என்பது குறித்து வெடித்த முரண்பாடு காரணமாக, அதன் தலைவரான ப்ரிகோசின் ரஷ்ய இராணுவத் தலைமையை விமர்சித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட ஆரம்பித்திருந்தது.

அதன் பின்னர், கடந்த ஜூன் மாத இறுதியில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நோக்கி முன்னேறும் தமது படைகளை நிறுத்தும்படி உத்தரவிட்ட வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கனி ப்ரிகோசின், பெலாரஸ் நாட்டுக்கு வெளியேறிச் செல்ல இணங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே, விமான விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரிகோசின் இறுதியாக ஆபிரிக்காவில் இருந்த வேளையில் நேரடி காட்சியில் தோன்றியிருந்தார்.

மேற்கு ரஷ்யாவில் உள்ள குஷென்கினோ கிராமத்திற்கு அருகே குறித்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது ​அவர்கள் பிரிகோசினுக்கு சொந்தமான Embraer Legacy எனும் பெயருடைய தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

பிரேசிலை தலைமையகமாகக் கொண்ட, ‘Embraer Legacy 600’ விமானம் 2002 முதல் பயன்பாட்டில் உள்ளதோடு, நிறுவனம் இதுவரை சுமார் 300 ஜெட் விமானங்களைத் தயாரித்துள்ளது.

குறித்த விமானத்தின் உற்பத்தி 2020 இல் நிறுத்தப்பட்டதோடு, கடந்த 20 வருடங்களில், இந்த வகை விமானம் ஒரு முறை மட்டுமே விபத்துக்குள்ளானது.

2006 இல், பிரேசிலில் இருந்து அமெரிக்கா நோக்கிப் பறந்து கொண்டிருந்த இவ்வகை புதிய விமானமொன்று விமானி செய்த தவறினால் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இவ்விபத்து தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT