Monday, May 20, 2024
Home » விளையாட்டு கழகங்களுக்கு உதவிகள் வழங்கும் ஏ.சி.ஆர். பவுண்டேசன்

விளையாட்டு கழகங்களுக்கு உதவிகள் வழங்கும் ஏ.சி.ஆர். பவுண்டேசன்

by sachintha
August 23, 2023 10:27 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்ற ஏ.சி.ஆர். பவுண்டேசன், விளையாட்டுக் கழகங்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அல் -நஜா விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் மின்னொளி சுற்றுப்போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது.

இச்சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை கடற்கரை பொதுவிளையாட்டு மைதானத்தில் ஐந்து நாட்களாக நடைபெற்றதுடன், 56 இற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றியிருந்தன. போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு அட்டாளைச்சேனை சோபர், – ஒலுவில் இலவென் ஸ்டார் ஆகிய கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன.

இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சோபர் விளையாட்டுக் கழகம் 5 ஓவர் முடிவில் 49 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 50 எனும் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலவென் ஸ்டார் கழகத்தினர் 42 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தனர். வெற்றி பெற்ற சோபர் அணியினருக்கு 40ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டன.

இரண்டாமிடத்தைப் பெற்றஇலவன் ஸ்டார் அணியினருக்கு 20ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டதுடன், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்றுக்கொண்ட அணிகளுக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இறுதிநிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் கலந்து சிறப்பித்திருந்தார். ஏ.சீ.ஆர். பவுண்டேசன்அமைப்பின் ஸ்தாபகரும், ஊடகவியலாளருமான றிசாத் ஏ. காதர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கழகத்திற்கான காசோலை, வெற்றிக் கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர்எஸ்.எல்.எம்.ஹனீபா, மாவட்ட சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.எம்.பைறூஸ், அதிபரும், வை.எம்.எம்.ஏ அம்பாறை மாவட்ட பணிப்பாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் , சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான கே.அப்துல் ஹமீட், தொழிலதிபர் அஸ்வர் ஷாலி மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் உறுப்பினரும், கிழக்கின் கேடய செயற்பாட்டாளருமான எஸ்.எம்.ஷபீஸ் ஆகியோருடன் பிரதேச முக்கியஸ்தர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கழகத்தின் தலைவர் எம்.எம்.றிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியினை கழகத்தின் உபதலைவர் எஸ்.எம்.எம்.இத்ரீஸ் நெறிப்படுத்தியிருந்தார். இச்சுற்றுப்போட்டி சிறப்புற இடம்பெறுவதற்கு தேவையான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் நல்கியிருந்தார் கழகத்தின் ஆலோசகரும், அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளருமான ஏ.சி.றியாஸ். அவர் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டிருந்தார். பிரதான அனுசரணை வழங்கிய ஏ.சி.ஆர்.பவுண்டேசனின் ஸ்தாபகர் றிசாத் ஏ காதரும் கெளரவிக்கப்பட்டார்.

எம்.எப்.நவாஸ்…

(திராய்க்கேணி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT