Tuesday, May 21, 2024
Home » தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை அதிகூடிய ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை அதிகூடிய ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது

- ஜனவரி முதல் 315 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

by Rizwan Segu Mohideen
August 23, 2023 10:01 am 0 comment

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையானது 34% ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,

“தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, இந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு பாரிய அளவில் பங்களிப்பை வழங்குவதோடு குறிப்பாக, ஏற்றுமதி வருமானத்தின் மூலம் டொலர்களை எமக்கு பெற்றுத்தரக் கூடிய ஒரு நிறுவனமாகும். தற்போது நாம் இந்த நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அதன் மூலம் இந்நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், நாம் 2022 ஜனவரி முதல் இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரை 230 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுள்ளோம். அது, இந்த வருடம் 315 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்கும் டொலர்கள் உண்மையில் இலங்கைக்கு வருகின்றதா? என்று பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறு கிடைக்க வேண்டிய வருமானம் உண்டியல் போன்ற பணப்பறிமாற்றங்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்காமல் போனது. எனவே இவற்றைத் தடுத்து நமது ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய டொலர்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அந்த வகையில் புதிய சுங்க அனுமதிப் பொறிமுறையொன்றை செயற்படுத்தியுள்ளதுடன் அதன் மூலம் இந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரத்தினக்கல் தொடர்பான முழு விபரங்களை பெற்று, அதன் வருமானம் மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக அதிகார சபை வேலை நேரத்தை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், மத்திய வங்கியின் அறிக்கையின் படி தற்போது இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை 34% சதவீத வருமான வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது. இது அதிகார சபையின் முன்னேற்றத்தினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் கடந்த வருடம் அனுமதி வழங்கல், மதிப்பீட்டுக் கட்டணம் போன்ற அதிகார சபையின் செயற்பாடுகளின் ஊடாக 144 மில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளதுடன் இந்த வருடம் அது 288 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலங்களில், பொஸ்பேட் நிறுவனத்தின் 150 மில்லியன் ரூபா மேலதிகப் பற்றுடன், ஊழியர்களுக்கு மேலதிக நேரக்கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை இருந்ததாகவும் ஆனால் தற்போது இந்நிறுவனம் போனஸ் உட்பட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துக் கொடுப்பனவுளையும் வழங்குவதுடன் ஏற்கனவே இருந்த மேலதிகப் பற்றையும் செலுத்தியதாகக் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், BCC நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்போது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் இப்போது 25 முதல் 30 டொன்கள் வரை சவர்க்கார உற்பத்தி இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த நிறுவனமும் கடனின்றி, இன்று அரசாங்கத்துக்கு சுமையின்றி செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசிய உப்பு நிறுவனம், வாழைச்சேனை கடதாசிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஓட்டு உற்பத்தித் தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்கள் கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கி வந்ததுடன் பல நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை இடைநிறுத்தி இருந்ததாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், அவை அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல்வேறு புதிய வேலைத்திட்டங்களின் ஊடாக அவற்றின் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அதன் மூலம் இவை தற்போது இலாபமீட்டும் நிறுவனங்களாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனமும் நிதி அமைச்சில் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ எவ்வித நிதியையும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தும் குறித்த நிறுவனங்களின் வருமானத்தில் இருந்தே வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்திடம் இருந்து நிதி பெறுவதற்குப் பதிலாக தற்போது, அரசாங்கத்துக்குத் தேவைப்படும்போது நிதி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அமைச்சின் நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளப்படும் வருமானத்தில் இருந்து குறித்த நிதியை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மூலம் மாத்திரம் சுமார் 400-500 மில்லியன் டொலர்களை இந்நாடு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நாட்டில் அதிகமானோருக்கு இந்த நிறுவனங்கள் மூலம் தொழில்வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும், நாங்கள் ஒரு பொக்கிஷத்தில் மேல் இருந்து கொண்டு பிச்சை வாங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிறுவனங்களை ஒழுங்குடுத்தி மேம்படுத்தும்போது பிரச்சினைகளும் தடைகளும் ஏற்படும் என்றும், நாடு கடனில்லாமல் வாழ வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT