Sunday, May 12, 2024
Home » அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம்

அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம்

- தோட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நிர்வாகம்

by Prashahini
August 21, 2023 9:59 am 0 comment

– உடைக்கப்பட்ட வீட்டுக்கு பதில் புதிய வீடு வழங்கவும் இணக்கம்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளரை பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது.

அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது.

மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட, ரத்வத்த கீழ்பிரிவில் மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்,தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக்குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.

அவ்வகையில் தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர் , ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கிய நிலையில் ,குறித்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன்,ஒரு கிழமைக்கு முன் அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் (19) தனது அதிகாரிகள் சகிதம் வருகை தந்த உதவி முகாமையாளர், அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளமையையும் அறியக்கிடைத்தது.

மேற்குறித்த சம்பவம் ,சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான விடயங்கள் மற்றும் மேலதிக விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காகவும், நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதற்காகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று (20) மாத்தளை சென்றிருந்தார்.

இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் ரூபதர்ஷன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் சஞ்ஜீவ விஜயகோன், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை சம்பவ இடத்திற்கு அமைச்சர் அழைத்த நிலையில், அதற்கு நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தோட்ட நிர்வாகத்துடன் ஜீவன் தொண்டமான் கடும் சொற்போரில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளரை பணி நீக்கம் செய்வதற்கு நிர்வாகம் இணங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீட்டை நிர்மாணிக்கவும் உடன்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT