Saturday, May 11, 2024
Home » பராமரிப்புக்காக செல்லும் கடல்சார் கண்காணிப்பு விமானத்திற்கு பதில் மற்றொன்றை வழங்கிய இந்தியா

பராமரிப்புக்காக செல்லும் கடல்சார் கண்காணிப்பு விமானத்திற்கு பதில் மற்றொன்றை வழங்கிய இந்தியா

- சரியாக ஒரு வருடத்தின் பின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு

by Rizwan Segu Mohideen
August 17, 2023 9:36 am 0 comment

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 (Dornier-228) கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் மற்றும் வலுவடையும் இந்திய இலங்கை உறவுகள் ஆகியவற்றைக் குறிக்கும் முகமாக இந்தியக் கடற்படைக்கு சொந்தமான டோனியர் விமானம் ஒன்று இலங்கை விமானப் படையினருக்கு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்காவிடம் கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப் படையின் முகாமில் நடைபெற்ற சம்பிரதாய பூர்வமான நிகழ்வொன்றில் இந்த விமானம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் இலங்கை விமானப் படையில் இணைக்கப்படும் இரண்டாவது இந்திய தயாரிப்பு டோனியர் இதுவாகும். 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, சரியாக ஒரு வருட காலத்திற்கு முன்னர் அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான முதலாவது டோனியர் விமானம் ஒரு வருட நிறைவில் பராமரிப்பு வேலைக்காக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு மாற்றீடாக இந்த டோனியர் விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் அதிநவீன டோனியர் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை சேவையில் இணைப்பதன் மூலம் இலங்கையின் கண்காணிப்பு திறன் துரிதமாக அதிகரிக்கும் அதேவேளை இலங்கை விமானப்படையின் பலம் மேலும் வலுவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாக, இலங்கை பாதுகாப்புப் படைகளின் திறன் மேம்பாடு மற்றும் ஸ்திரமான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்காலத்தில் இந்திய உதவியுடன் இலங்கைக்கு மேலதிக டோனியர் விமானங்கள் வழங்கப்படுவதன் மூலம் இந்த ஈடுபாடு மேலும் உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வளரும் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் பிரதிபலிப்பாகவே இந்திய கண்காணிப்பு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளமை அமைந்துள்ளது. கடந்த வருடம் சேவையில் இணைக்கப்பட்ட இந்திய கடற்படையின் டோனியர் விமானம் சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் SAR இலக்குகளை வெற்றிகொள்வதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளதாக உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த விமானத்தின் செயல்திறன் மிகவும் வலுவானதாக காணப்படும் அதேவேளை இரு நாடுகளினதும் படையினருக்கு இடையே SOPகளை நெறிப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்கியது. இந்த விமானத்தின் செயற்பாடுகள் மூலம் நமது கடற்பரப்பைப் பாதுகாப்பது, நமது இரு நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான அமைதியான சூழலை உருவாக்க உதவும் என்றும், இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்’ கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படும் முன்னுரிமையின் அடையாளமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் மற்றும் ஆட் கடத்தல்கள், ஏனைய கடத்தல் நடவடிக்கைகள், தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் பிராந்தியத்தில் காணப்படும் சவால்களை முறியடித்து பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான வல்லமையினை இவ்விமானத்தில் காணப்படும் அதி நவீன கருவிகள் மூலம் இலங்கை விமானப் படையினர் பெற்றுக்கொள்கின்றனர். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய விடயமாக கடல்சார் பாதுகாப்பு அடையாளங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விமானத்தை இலங்கை விமானப் படையின் சேவையில் இணைத்தமையானது கடல்சார் அச்சுறுத்தலில் இருந்து இலங்கையின் தனித்துவமான பொருளாதார வலயத்தினை விடுவிக்கும் செயற்பாடுகளில் சாதகமான பங்களிப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததோடு, விமானத்தின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,

“நமது அயல் நாடான இந்தியா பெருமளவான உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட போது இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை உணர முடிந்தது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின் பலனாக இருநாடுகளினதும் உறவு மேலும் வலுப்பெற்றது. அதற்கமைய எதிர்காலத்திலும் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்ற தீர்மானித்துள்ளன. தொடர்பு என்பது மிக முக்கியமானதாகும். அது விரிவான அர்த்தத்தை கொண்ட சொற்பதமாகும். அதனை வீதித் தொடர்புகள், மக்கள் இடையேயான தொடர்புகள், பொருளாதார தொடர்புகள், விநியோகத் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்புகளாக இருக்கலாம்.

கடந்த காலத்தில் கடினமாக நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருந்த போது, எமது கடல்சார் பணிகளுக்கு அவசியமான எரிபொருளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நமது விமானப்படைக்கும் கடற்படைக்கும் வழங்கியிருந்தன.

விமானங்கள் மற்றும் மற்றைய இயந்திரங்களையும் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்தியில் விமானப் படையின் தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினமாக அமைந்திருந்தது.

புதிய தொழில்நுட்பங்களுக்கு அமைய எமது விமானங்களையும் வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தாலும், எமது பொருளாதாரச் சரிவினால் அதனை செய்ய முடியவில்லை. அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

எமது கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம், ஆயுத கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முக்கியமானதாக காணப்படுகின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் எமக்கு பெருமளவான பொறுப்புகள் காணப்படுகின்றன.

நாம் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் தினமும் மாற்றமடைவதால், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பணியாற்ற வேண்டும். இலங்கை கடற்படை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தற்போதுள்ள நெருக்கடிகள் இருக்கவில்லை. யுத்த காலத்தில் இலங்கை விமானப் படை மீது சார்ந்திருந்த பணிகள் வேறுபட்டவையாகும். புதிய தொழில்நுட்பம் மற்றும் காலத்துடனான மாற்றங்களுக்கு இணையாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். அந்த நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் ஜனாதிபதியால் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக மணல் வியாபாரத்தை தடுக்கவும் வனவள கட்டமைப்பைப் பாதுகாக்கவும் அவதானம் செலுத்த வேண்டும். எமது நாடு சூரிய சக்தியும் காற்று வலுவும் நிரம்பிய நாடாகும். நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும். அந்த பணிகளில் படையினருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.”

இந்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருடன் இந்திய உயர் ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT