Monday, May 20, 2024
Home » அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் அதி நவீனமாகும் இந்திய ரயில்வே!

அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் அதி நவீனமாகும் இந்திய ரயில்வே!

by Rizwan Segu Mohideen
August 16, 2023 10:48 am 0 comment

இந்திய ரயில்வே அமைச்சு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வழிகாட்டலின் கீழ், நாடு முழுவதும் உள்ள இருபத்தேழு மாநிலங்களை உள்ளடக்கிய முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான புதிய கொள்கை திட்டமொன்றை வகுத்துள்ளது.

“அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்” என்று அழைக்கப்படும் இத்திட்டம் இந்தியா முழுவதும் 1307 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 508 ரயில் நிலையங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட ரயில் நிலையங்கள் அதி நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளதோடு, உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றமடையவுள்ளன. இந்த ரயில் நிலைய மேம்பாட்டுத்திட்டத்திற்காக 24,470 கோடி இந்திய ரூபாய் செலவிடப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்களும், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மே்ம்படுத்தப்படவுள்ளன.

அம்ரித் பாரத் திட்டம் நவீனமயமாக்கலை முக்கிய நோக்கமாக கொண்டிருந்த போதிலும், இந்தியாவிலுள்ள பழமையான ரயில் நிலையங்களின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதில் முக்கிய நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல ரயில் நிலையங்கள் கட்டடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவற்றின் பாரம்பரியத்தை பாதுகாத்து, நவீனத்துவத்துடன் அவற்றை இணைக்கும் முயற்சிகளை இந்த அம்ரித் பாரத் திட்டம் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புகளையும், கழிவு மேலாண்மை நடைமுறைகளையும் சூழலுக்கு ஏற்றவாறு அமைப்பதில் இத்திட்டம் முன்னுரிமை அளித்துள்ளது.

சூரிய சக்தி ஆற்றல், மழைநீர் சேகரிப்பு மற்றும் பசுமையை பாதுகாப்பதன் மூலம் இந்த நிலையங்களின் ஊடாக வெளியேற்றப்படும் சூழலை மாசு படுத்தும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகள் இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக கொள்ளப்பட்டுள்ளது.

அம்ரித் பாரத் திட்டத்தின் மையக் கவனம் பயணிகளின் வசதிகளை நவீன முறையில் கட்டமைப்பதை இலக்காக கொண்டுள்ளது. குறித்த ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு ஓய்வறைகள், சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிவறைகள், நிகழ்நேர தகவல்களுக்கான டிஜிட்டல் முறையிலான காட்சிப்படுத்தல் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான பிரத்யேக வசதிகள் மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் மற்றும் இலவச வைஃபை இணைப்பு உள்ளிட்ட பயணிகளுக்கான நவீன வசதிகளை வழங்குவதை இத்திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அம்ரித் பாரத் கருப்பொருளின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கட்டமைப்பை உறுதி செய்வதைக் குறிப்பிடலாம்.

அம்ரித் பாரத் கருப்பொருளின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன.

அதற்கான ஒரு உதாரணம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையமாகும். இது நவீன முகப்பில், உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகள் மற்றும் பயணிகளுக்கு ஏற்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

குஜராத்தில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம், சமகால கட்டிடக்கலையுடன் பாரம்பரிய கலை வடிவங்களை உள்ளடக்கிய அதி நவீன ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதிகளை உள்ளடக்கிய மற்றொரு மேம்பாட்டுத் திட்டமாக பார்க்கப்படுகிறது.

அண்மையில், ரயில் நிலையங்களை மறுசீரமைத்து நவீனமயமாக்கும் இந்த “அம்ரித் பாரத்” திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கி புதிய இந்தியா வேகமாக நகருவதாக குறிப்பிட்டார்.

புதிய ஆற்றலையும், புதிய உத்வேகங்களையும் மற்றும் புதிய தீர்மானங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டம் இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவிலுள்ள 1300 ரயில் நிலையங்களில் 508 நிலையங்கள் சுமார் 25,000 கோடி இந்திய ரூபாய் செலவில் அமிர்த பாரத் நிலையங்கங்களாக உருவாக்கப்படும் என்றும் அவை நவீனத்துவத்துடன் மறுவடிவமைக்கப்பட்டு புதிய இலக்கை நோக்கி நகரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த அம்ரித் பாரத் நவீன மேம்பாட்டுத் திட்டத்தின் பலன்கள் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும் என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 4,000 கோடி ரூபாய் செலவில் 55 அம்ரித் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை உண்மையாக உணர, அதற்கு நீடித்த அரசு அர்ப்பணிப்பு, தனியார் துறை ஒத்துழைப்பு மற்றும் சமூக ஈடுபாடு தேவையென்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் இத்திட்டத்தின் முதல் பகுதியாக, மதுரை கோட்டத்தின் பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், விருதுநகர், புனலூர், சோழவந்தான், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,ராஜபாளையம், பரமக்குடி ஆகிய 15 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னை ரயில்வே கோட்டத்தில் 44 ரயில் நிலையங்களுக்கு ரூ.251 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்துருவாக்கம் செய்யப்பட உள்ள ரயில் நிலையங்களின் மாதிரி படங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை அம்பத்தூர், கோவை, உதகை, நாகர்கோவில், திருச்செந்தூரில் ரயில் நிலையங்கள் புத்துருவாக்கம் செய்யப்படும் என தமிழ் நாடு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தேசிய இரயில் அமைப்புகளில் ஒன்றாக இந்திய ரயில்வே அமைப்பு பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள ரயில்வே தண்டவாளங்கள், அந்நாட்டின் இரும்பிலான நரம்புகள் என வர்ணிக்கப்படுகின்றன. மிகப்பெரிய ரயில் வலையமைப்பைக் கொண்டுள்ள இந்தியா முன் வைத்துள்ள இந்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் அதன் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT