Tuesday, May 21, 2024
Home » சமுர்த்தி அதிகாரசபையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றுக்கு ஓய்வூதியம் இல்லை

சமுர்த்தி அதிகாரசபையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றுக்கு ஓய்வூதியம் இல்லை

- அஸ்வெசும, சமுர்த்தி திட்டங்களை ஒன்றிணைத்து நடைமுறைப்படுத்த கோபா குழுவில் அவதானம்

by Rizwan Segu Mohideen
August 15, 2023 1:29 pm 0 comment

– சமுர்த்தி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பணிகளை நிறைவேற்றுதல் மற்றும் உரிய பணி இலக்குகளை வழங்குவது தொடர்பில் அவதானம்

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் என்பன 2023.05.06 ஆம் திகதி கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டபோது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (09) கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு, 26.05.2023 ஆம் திகதி கோபா குழு கூடியபோது ​​இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் நியமனம் வழங்கப்பட்டதிலிருந்து ஓய்வூதியத்துக்கான உரிமை பெற்ற அதிகாரிகள் குழுவுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அன்றையதினம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து இங்கு விசாரணை செய்யப்பட்டது. இருந்தபோதும் குறித்த அறிவுறுத்தல் தொடர்பில் திருப்தியடையும் வகையில் தீர்வு வழங்கப்படவில்லை என்பதை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிர்வாகப் பிரச்சினைகள் இருப்பதும் தெரியவந்திருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்தாதது குறித்து கோபா குழு கேள்வி எழுப்பியது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் கேட்ட போது, ​​நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விடயத்தை கையாள முடியும் எனக் கோபா குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி அதற்கான பதில்களை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் பரிந்துரைத்தார் அத்துடன், இத்திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை தொடர்பில், இம்மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சின் செயலாளருக்கு முடிவொன்றை அனுப்பிவைக்குமாறும் கோபா குழு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியது.

மேலும், சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளின் செயல்திறன் மற்றும் குறிப்பிட்ட பணி இலக்குகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்துமாறும் கோபா குழு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. வலய மற்றும் பிரதேச மட்டங்களில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து, அந்தச் செயற்பாடுகளின் செயல்திறனை அவ்வப்போது கண்காணித்து, வருட இறுதியில் மதிப்பீடு செய்யுமாறு கோபா குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் அஸ்வெசும வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் என்பவற்றை இணைந்து செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மானியம் வழங்கப்படுவதாகவும், அதே குறைந்த வருமானம் பெறுவோர் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வலுவூட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த இரண்டு திட்டங்களையும் கூட்டாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோபா குழு வலியுறுத்தியது.

இது தவிர சமுர்த்தி வங்கிகளின் பங்களிப்பு மற்றும் அஸ்வெசும கொடுப்பனவை சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சுரேன் ராகவன், டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, சிவஞானம் ஸ்ரீதரன், ஜே.சி. அலவத்துவல, வீரசுமண வீரசிங்ஹ, இசுரு தொடங்கொட, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT