Monday, May 20, 2024
Home » அந்நியச் செலாவணியை ஈட்டும் தொழில்துறையாக சுதேச வைத்தியத்துறை மேம்படுத்தப்படும்!

அந்நியச் செலாவணியை ஈட்டும் தொழில்துறையாக சுதேச வைத்தியத்துறை மேம்படுத்தப்படும்!

- பாரம்பரிய வைத்தியர்களின் பதிவுப் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய திட்டம்

by Rizwan Segu Mohideen
August 15, 2023 5:36 pm 0 comment

– ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை
– ஆயுர்வேத கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனம்
– சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு ஆயுர்வேத திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்

சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி,

“சுதேச வைத்தியத்துறை மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இதனை மேம்படுத்த நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதற்கமைய சுதேச வைத்தியத் துறையை, ஏற்றுமதி வருமானத்தைப் பெறும், அந்நியச் செலாவணியை ஈட்டும் வர்த்தகப் பெறுமதியுடன் கூடிய சுதேச வைத்தியக் தொழில்துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுதேச வைத்தியத்துறை என்பது எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய அளவில் பங்களிப்புச் செய்யக் கூடிய ஒரு துறையாகும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 08ஆம், 09ஆம், 10ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுதேச வைத்தியத் துறைசார் சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இணையாக கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் மற்றும் உளப்பாங்கு மாற்றம் போன்றவற்றை சீர்செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சுகாதார அடிப்படையில் அன்றாட பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும், போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் 63 வருடங்களைக் கடந்துள்ள சுதேச வைத்திய சட்டத்தை மறுசீரமைக்கும் பணிகள் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுதேச வைத்தியர்களின் பிரச்சினைகளை அவர்களின் பிரதேசங்களுக்கே சென்று தீர்த்து வைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதுவரை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யாமல், பாரம்பரியமாகவும் மற்றும் பரம்பரை அறிவு, அனுபவத்தின் அடிப்படையிலும் சுதேச வைத்திய சிகிச்சைகளை செய்துவரும் சுதேச வைத்தியர்களை, ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்வதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரவித்தார்.

அந்த வகையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுத்து மூலப் பரீட்சைகளுக்கு தோற்றுவதில் நடைமுறை ரீதியிலான பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால், குறித்த பிரதேசங்களுக்குச் சென்று அவர்கள் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெற்று, முறையான பரிசீலனைகளுக்குப் பின்னர் அவர்களைப் பரீட்சையின்றியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்மூலப் பரீட்சையுடன் பதிவுகளை முன்னெடுக்கவும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இவர்கள் வைத்தியர்களாக மக்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் என்பதால் இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணிப்புடன் அவர்களுக்கு, பாரம்பரிய சுதேச வைத்தியர்களாக அந்த கௌரவத்தை பெற்றுக் கொடுக்கவும், அவர்களைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடியினால் சுதேச வைத்தியத் துறையில் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலம்பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போது உள்நாட்டில் விளையக் கூடிய, மருத்துவ மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படும் பயிர்களை எமது நாட்டிலேயே பயிரிட நடவடிக்கை எடுத்து, இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை காலமும் பல்வேறு சிக்கல்களுக்கு எதிர்கொண்டிருந்த ஆயுர்வேத கூட்டுத்தாபனம் முறையான முகாமைத்துவத்தின் மூலம் தற்போது இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதித் துறையில் பிரவேசிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்களுக்கு ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் முகவர்களாக இணையும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் அதன் மூலம் எமது நாட்டு ஆயுர்வேத உற்பத்திகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும் என்றும் இதன் ஊடாக இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஆயுர்வேத சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் துறைசார் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு NVQ 4 சான்றிதழுடன் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்கக் கூடியவர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT