Tuesday, May 21, 2024
Home » சந்திரனின் சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 பிரவேசம்

சந்திரனின் சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 பிரவேசம்

by Rizwan Segu Mohideen
August 10, 2023 1:51 pm 0 comment

சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகப் பிரவேசித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

சந்திரனின் தென் பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் திகதி ஏவப்பட்ட இவ்விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையைக் கடந்து 06 ஆம் திகதி சந்திரனின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாகப் பிரவேசித்திருக்கிறது என்று அவ்வமைப்பு விடுத்துள்ள ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விண்கலத்தை சந்திரனின் தென் பகுதியில் எதிர்வரும் 23 ஆம் திகதி தரையிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு சந்திரயான்-3 தரையிறங்கியதும் சந்திரனில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாலாவது நாடாக இந்தியா விளங்கும். அத்தோடு சந்திரனின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்பி வைத்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுக் கொள்ளும்.

2019 இல் சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சந்திரனின் மேற்பரப்பில் தரையிறக்கும் நடவடிக்கையில் ஏற்பட்ட சவால்களின் விளைவாக அத்திட்டம் தோல்வியடைந்தது. என்றாலும் இஸ்ரோ அமைப்பு மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக சந்திரயான்-3 தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

சந்திரயான்-2 திட்டம் தோல்வியடையக் காரணமாக இருந்த விடயங்கள் சந்திரயான்-3 திட்டத்தில் சீரமைக்கப்பட்டுள்ளன. இம்முறை எமது விண்கலம் சந்திரனின் தென் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலங்களை அனுப்பி சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT