Home » உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப்: யுபுன் அபேகோன் திடீர் விலகல்

உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப்: யுபுன் அபேகோன் திடீர் விலகல்

by sachintha
August 4, 2023 11:07 am 0 comment

 

இத்தாலியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் எதிர்வரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு உடல் தகுதியை பெற எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“புடபஸ்டில் உள்ள உலக தடகள சம்பியன்சிப் போட்டியில் இருந்து விலகுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக எனது சிறந்த திறமையை வெளிப்படுத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளேன்” என்று யுபுன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த சில மாதங்களில் உடல் மற்றும் உள ரீதியில் கடினமானதாக இருந்தது. முக்கியமாக மீட்சிக் காலம் ஒன்றை நான் கடந்து வருவதும் நிலைமை மெதுவாக சாதகமான பக்கம் திரும்புகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்ததே” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உபாதைக்கு உள்ளானதால் அண்மைக் காலத்தில் அவரால் பல போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாய்லாந்தின் பட்டாயாவில் அண்மையில் நடைபெற்ற 24ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10 விநாடிக்கு குறைவான காலத்தில் நிறைவு செய்த முதலாவது மற்றும் ஒரே தெற்காசிய வீரராக உள்ள யுபுன் அபேகோன் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதப்பம் வென்றார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஹங்கேரியின் புடபஸ்ட்டில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் தொடருக்கு தகுதி பெறுவதற்காக வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அந்த காலப்பகுதியில் தனிநபர் போட்டி நிகழ்ச்சியொன்றுக்காக இலங்கை சார்பில் தகுதிபெற்ற ஒரே வீரர் யுபுன் அபேகோன் ஆவார்.

எவ்வாறாயினும், இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப்பில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு மொத்தம் 56 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பட்டியலில் யுபுன் அபேகோன் 42ஆவது இடத்தில் இருந்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT