Home » சுயதொழில் கல்வியை வழங்கும் சீனன்கோட்டை பவுண்டேஷன்

சுயதொழில் கல்வியை வழங்கும் சீனன்கோட்டை பவுண்டேஷன்

-நாளை கைப்பணிக் கண்காட்சி, சான்றிதழ் வைபவம்

by sachintha
August 4, 2023 10:41 am 0 comment

பேருவளை சீனன்கோட்டையில் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சீனன்கோட்டை பௌண்டேஷன் நிறுவனம் கடந்த பல வருடங்களாக சமூகநலன் கருதி பேருவளை பிரதேச சமூகத்திற்கு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. பிரதானமாக சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் பெண்களுக்கு இலவச தையல்கலை பயிற்சிநெறியொன்றை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகின்றது.

பெண்களின் திறன்களை வளர்க்கும் நோக்கிலும் அவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் நோக்கோடும் பேருவளை பிரதேசத்தில் இந்நிறுவனம் தொழிற்கல்வியை வழங்கி வருகின்றது. இவ்வாறாக இந்நிறுவனத்தினூடாக நடத்தப்பட்டு வந்த இப்பயிற்சி நெறிகளில் 600 இற்கும் மேற்பட்ட மாணவியர்கள் தையல்பயிற்சி கற்கைநெறியை பூர்த்தி செய்து இதுவரை பயனடைந்துள்ளார்கள்.

தையல்கலையில் அறிவும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்களால் நடத்தப்படும் இப்பயிற்சி நெறிகளில் கலந்துகொண்ட மாணவிகளில் பலர் தையல் துறையில் தேர்ச்சி பெற்று சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில இம்முறை நடத்தப்பட்ட தையல்பயிற்சி நெறிகளில் 110 மாணவிகள் கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்கள். அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கைப்பணிக் கண்காட்சி நாளை 5 ஆம் திகதி சனிக்கிழமை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அத்தோடு பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 110 மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் இதன்போது நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

பெண்களுக்கென மாத்திரம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை பேருவளை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையின் முன்னாள் உபஅதிபர் ஜனாபா மிஸ்பா ஷம்ஸுதின் அன்ஸார் ஆசிரியை திறந்து வைப்பார். பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் பஸால் ஷரீப் தலைமையில் நாளை மாலை நடைபெறவிருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷாமிலா தாவூத் பிரதம அதிதியாகவும் முஸ்லிம் சேவை பணிப்பாளர் ஜனாபா பாத்திமா ரினூஸியா கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வில் தையல் பயிற்சிநெறியை வெற்றிகரமாக பூர்த்திசெய்த 110 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் கைப்பணி கண்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவிகள் பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்படவுள்ளனர்.

அஜ்வாத் பாஸி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT