Monday, May 20, 2024
Home » திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிடம் ரூ.18 இலட்சம் மோசடி

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிடம் ரூ.18 இலட்சம் மோசடி

- திட்டமிட்டு பலரிடம் கைவரிசை

by Prashahini
August 3, 2023 11:47 am 0 comment

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி ரூ.18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது நேற்று (02) செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க வந்துள்ளார்.

இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில் , இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர் , தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும் , தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும் , அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறி , அதற்காக ரூ.18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வங்கியில் வைப்பிலிடுங்கள் என ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார்.

இளைஞனும் அவரின் பேச்சை நம்பி பணத்தினை வைப்பிலிட்டு உள்ளார். சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுதாகரித்துக்கொண்ட இளைஞன் , அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டு , முரண்பட்ட போது , அவர் தொடர்பை துண்டித்துக்கொண்டார். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்தது.

அதனால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகராம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இளைஞன் காசை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.

குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்ச ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

அதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற பெண் , வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும் , அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT