Tuesday, May 14, 2024
Home » உலக தெங்கு தினத்தையிட்டு 2ஆவது தென்னை முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பம்

உலக தெங்கு தினத்தையிட்டு 2ஆவது தென்னை முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பம்

- இவ்வருடம் 290 மில். கி.கி. தேயிலையை ஏற்றுமதி செய்ய எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
August 2, 2023 5:42 pm 0 comment

– இறப்பர் உற்பத்திகளில் 900 மில். டொலர், தென்னை சார் உற்பத்திகளில் 700 மில். டொலர் எதிர்பார்ப்பு
– கறுவா உற்பத்தியை ஊக்குவிக்க முறையான திட்டம்
– கோப்பி பயிர்ச்செய்கையை மீள விரிவுபடுத்துவது குறித்து கவனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களை மையப்படுத்தி வடக்கில் ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வருடத்தில் 290 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறப்பர் சார்ந்த ஏற்றுமதி மூலம் 900 மில்லியன் டொலர்களும் தேங்காய் சார்ந்த ஏற்றுமதி மூலம் 700 மில்லியன் டொலர்களும் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கையில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கும் கோப்பி பயிர்ச் செய்கையை மீள விரிவுபடுத்துவதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண,

கடந்த வருடத்தில் உர தட்டுப்பாடு காரணமாக பெருந்தோட்டத்துறை சரிவை சந்தித்திருந்தது. உரத் தட்டுப்பாட்டினை போன்றே சீரற்ற காலநிலையும் பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால் 50 கிலோ யூரியாவின் விலை முப்பதாயிரம் ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில் தற்போது அதன் விலையை 9000 வரையில் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் வருட இறுதியில் முன்னூறு மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்லைன் முறையில் உலக சந்தையில் தேயிலை விற்பனை செய்யும் முறைமை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஈரானிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளுக்கு பதிலீடாக தேயிலை ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் எமக்கு கிடைக்காமல் போன ஈரான் தேயிலை சந்தை வாய்ப்பை மீண்டும் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும். இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களான பாகிஸ்தான், ரஸ்யா, யுக்ரேன், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பிரச்சினை காரணமாக அவர்களின் தேயிலை கொள்முதல் திறன் குறைவடைந்து வருவதாகவும், இலங்கை தேயிலைக்கான விலை உலக சந்தையில் நிலையாக காணப்பட்டாலும் தேயிலை கொள்வனவு செய்யும் நாடுகளின் கொள்முதல் திறன் குறைவடைந்து வருகின்றமை சிக்கலாக உள்ளது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் 10 பேர்ச்சஸ் காணியை அவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கான காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதோடு, கடந்த வருடத்தில் இறப்பர் எற்றுமதியிலும் ஒரு பில்லியனை இலாபமாக ஈட்ட முடிந்துள்ளது.

கொரோனா தொற்று பரவிய காலத்தில் கை உறைகள் உற்பத்திக்காக இறப்பர் கொள்வனவு செய்யப்பட்டதனால் அதிகளவான ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. எவ்வாறாயினும் தற்போதைய நெருக்கடிகள் காரணமாக இறப்பருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. அதனால் இவ்வருடத்தில் 900 மில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தேங்காய் ஏற்றுமதி வருமானம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின் தெங்கு உற்பத்தியில் காணப்படும் பல்வகைத்தன்மை காரணமாக அதற்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய் பால், தேங்காய் சிரட்டை, கார்பன் உற்பத்திகள் ஆகியவற்றிற்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. இவ்வருடத்தில் தென்னை சார் உற்பத்திகள் ஊடாக 700 மில்லியன் டொலர் இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தசாப்தத்திற்குள், தென்னை சார் உற்பத்திகளிலிருந்து 02 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த இரண்டாவது தெங்கு முக்கோணத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெங்கு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையை மாற்றி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கறுவா விளைச்சளுக்குத் தேவையான புவிசார் குறியீட்டுச் (GI) சான்றிதழை நாம் தற்போது பெற்றுள்ளோம். உலகிலேயே சிறந்த கறுவா இலங்கை மற்றும் மடகஸ்கரில் மாத்திரமே இருப்பதால், சிறந்த ஏற்றுமதி வருமானத்தைப் பெற முடியும். எனவே கறுவாச் செய்கையை ஊக்குவிப்பதற்காக அமைச்சு என்ற வகையில் முறையான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

உலகில் மிகவும் பிரபலமாகி வரும் கோப்பியை, பயிர்ச்செய்கையாக மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேயிலைக்கு முன்னர் இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சில பூஞ்சை நோய் காரணமாக, விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டி ஏற்பட்டது. ஆனால் உலக சந்தையில் கோப்பிக்கு அதிக கேள்வி உள்ளதால், இலங்கையில் கோப்பி விளைச்சலை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 1000 ஏக்கரில் கோப்பி பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT