Tuesday, May 14, 2024
Home » சந்நிதியான் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

சந்நிதியான் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

by Prashahini
August 2, 2023 4:27 pm 0 comment

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்றது எதிர்வரும் 30ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் 31ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஆலய மகோற்சவ திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி தலைமையில், நேற்று முன்தினம் (31) நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், பிரதேச செயலர் ஊடகங்களுக்கு செய்தி குறிப்பை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில்,

மகோற்சவ காலத்தில் ஆலயச்சூழலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதனை தடுப்பதற்காக ஆலய பிரதான ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கின்ற பாதையின் ஊடாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகன தரிப்பிடத்திற்கு செல்ல முடியும். தொண்டைமானாறு ஆற்றில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஆலய பூசைகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆலய தேரோடும் வீதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கும் தற்காலிக கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் காணிகளில் அமைந்திருக்கும் நிரந்தர கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்பதுடன் புதிய கடைகளுக்கும் மற்றும் வீதியோர கடைகளுக்கும் ஆலய வீதியில் அமைக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆலய மகோற்சவ காலத்தில் உணவு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டி இருப்பின் அவ் உரிமையாளர் நாட்டின் எப்பாகத்திலாவது உணவு நிலையம் நடாத்திய அனுபவம் மற்றும் மருத்துவ சான்றிதழை கொண்டிருத்தல் வேண்டும்.

உணவு நிலையங்களில் உணவினை கையாள்பவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் பணிபுரிபவர்கள் என அனைவரும் மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு நிலையங்களிற்கான குடிநீர் பொதுச்சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெறப்பட வேண்டும்.

ஆலய ஒலிபெருக்கி பாவனை தவிர வேறு ஒலிபெருக்கி பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டடுள்ளது. கடை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் முறையாக கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்த்திருவிழா அன்று தேரவீதியுலா வரும் சமயத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தவிரப்பதற்காக அந்த நேரத்தில் ஆற்றங்கரை வீதியூடாக வாகனங்கள் உள் நுழைவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படும். அடியவர்கள் ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT