Monday, May 20, 2024
Home » இன்னும் இழுத்தடிக்கப்படும் அசுத்தமான சீன சேதனப் பசளை விவகாரம்

இன்னும் இழுத்தடிக்கப்படும் அசுத்தமான சீன சேதனப் பசளை விவகாரம்

by Rizwan Segu Mohideen
July 31, 2023 12:11 pm 0 comment

அண்மைக் காலமாக இலங்கை உரத் தட்டுப்பாடு காரணமாக கடுமையான விவசாய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த பிரச்சினை நாட்டின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்திற்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உரம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வெளிநாடுகளின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு சேதனப் பசளை வகைகளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோத்தபய ராஜபக்ச அரசாங்கம் இரசாயன உரங்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதித்ததன் காரணமாக விவசாயத் துறையில் ஏற்பட்டது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் 2021ம் ஆண்டு சீனாவின் Qingdao Seawin Biotech Group Ltd நிறுவனத்திடமிருந்து ஒரு தொகுதி சேதன உரங்களை இலங்கை வாங்க முடிவு செய்தது. இருப்பினும், சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட சேதனப் பசளை மாதிரிகளை பரிசோதனை செய்த போது, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் அவை மாசுபட்டிருப்பதாக அறிய வந்தது. இதனைத் தொடர்ந்து உரத்தை ஏற்க அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. ஆபத்தை விளைவிக்கும் இந்த அசுத்தமான கரிம உரங்களை இலங்கை நிராகரித்த போதும், குறித்த சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (1,382 மில்லியன் ரூபா) செலுத்த வேண்டும் என சீன நிறுவனம் பாரிய அழுத்தத்தை இலங்கைக்குக் கொடுத்தது. நிதிநெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை அசுத்த உரத்தை கொண்டு வந்த கப்பலுக்கு பணத்தை கட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதியில் சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட பணமும் கிடைக்காமல், உரமும் கிடைக்காமல் இலங்கைக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையில் இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இருந்து வருகிறது.
சீனாவிலுள்ள கின்டாஓ சீவின் பயோடெக் குரூப் நிறுவனத்திற்கு (Qingdao Seawin Biotech Group Ltd) இந்த அசுத்த உரத்திற்கான பணம் செலுத்தப்பட்டது. இத்தகைய மோசடி செயற்பாட்டால் சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் உருவான இராஜதந்திர முறுகலைத் தொடர்ந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இலங்கை இந்தத் தொகையை குறித்த சீன நிறுவனத்திற்கு செலுத்தியது. உண்மையில், தரம் குறைந்ததன் காரணமாக நிராகரிக்கப்பட்ட ஒரு சரக்குக்கு இலங்கை கட்டாயத்தின் பேரில் பணம் செலுத்தியது.

உலக அரங்கில் அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு நாடு என்ற ரீதியில் சீனாவின் இந்த செயற்பாடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிறிய நாடுகளை பெரிய நாடுகள் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி சூறையாடலாம் என்பதற்கு இந்த உர விவகாரம் ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைகிறது. மேலும் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தால் பெரிய நாடுகளின் அநீதியான முடிவுகளுக்கு சவால் விடுவதற்கு சிறிய நாடுகள் அச்சப்படும் நிலையும் உருவாகியிருக்கிறது.

சீனாவின் அசுத்தமான உரக் கப்பலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்தக் கப்பலுக்கு இலங்கை ஒரு போதும் பணம் செலுத்தாது என்றும் அப்போதைய விவசாய அமைச்சர் அளுத்கமகே தெரிவித்திருந்தார். என்றாலும், இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக இலங்கை தனது நிலைப்பாட்டிலிருந்து சறுக்கியது. பொருளாதார அழுத்தத்தில் தத்தளித்து வரும் இலங்கை, குறித்த நிராகரிக்கப்பட்ட உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட தொகையை திருப்பித் தருமாறு சீன நிறுவனத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்தது.

என்ற போதிலும், உர விவகாரத்தில் சீனா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட தகராறு இறுதியில் சீனாவுக்கு சாதகமாக முடிந்தது.
அப்போதைய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கூற்றுப்படி, 20,000 தொன் உரங்களை வாங்குவதற்கு கிங்டாவோ சீவின் பயோடெக் குழுமத்திற்கு இலங்கை 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியதாக அறிய வந்தது.

மேற்படி, இலங்கையால் செலுத்தப்பட்ட தொகையைத் திருப்பித் தருமாறும் அல்லது அந்தப் பணத்தின் பெறுமதிக்கு ஏற்ற இரசாயன உரங்களை வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் விடுத்த பல கோரிக்கைகளுக்கு இதுவரை சீன உர நிறுவனத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறவில்லை.
இந்த உர விவகாரம் இராஜதந்திர பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு வெளிவிவகார அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்தது. எனினும், இதுவரை சீன தரப்பிலிருந்து இழப்பீடு பெறும் கோரிக்கை தொடர்பாக எந்தவிதமான சாதமான பதிலும் இன்று வரை கிடைக்கவில்லை. செலுத்தப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராஜதந்திர வழிகளில் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இழப்பை மீட்பதற்கும் இராஜதந்திர வழிகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சின் செயலாளர் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், இந்த உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் செயல்திறன் பத்திரங்களின் பதிவுகளை ஒழுங்காக, செல்லுபடியாகும் வகையில் வைத்திருக்கத் தவறியதால், இலங்கை அதிகாரிகளும் கடமை தவறிழைத்துள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விவசாய அமைச்சு, விவசாய இராஜாங்க அமைச்சு, கொழும்பு கொமர்ஷியல் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் மற்றும் சிலோன் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் போன்றவை தமது கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உர கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த சேதனப் பசளை கொள்வனவு விவகாரத்தில் அரச அதிகாரிகள் கடமை தவறிய குற்றச்சாட்டை இந்தக் குழு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மையில்அகுனுகொலபெலஸ்ஸ, எரமினிய விவசாய ஆராய்ச்சி பண்ணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சீனாவுடன் சர்ச்சையை நீடிக்க இலங்கை விரும்பவில்லை. இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு, அதாவது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளில் சீனாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும் என இலங்கை அஞ்சுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான விவகாரத்தில் சீனாவின் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு இலங்கை செயற்பட வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

என்ற போதிலும், இந்தக் குழப்பமான, இக்கட்டான சூழலில், இலங்கைக்கு உதவுவதில் இந்தியா கணிசமான பங்கைக் கொண்டிருந்தது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனுக்குச் சென்று, சர்வதேச நாணய நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவைச் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினார்.

சர்வதேச நாணய நிதியத்தில் சீனாவின் செல்வாக்கு பற்றி இலங்கை நன்கு அறிந்திருப்பதுடன் சீனாவை கையாள்வதில் அதிக கவனத்தை கையாண்டு வருகிறது. எது எப்படியிருந்தாலும், கணக்காளர் நாயகத்தின் அறிக்கையில், இந்த உர கொள்வனவின் பின்னணியில் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட குறைந்த தரத்திலான சேதனப் பசளை கொடுப்பனவை அவர்களின் வரிப்பணத்தின் மூலம் செலுத்தியுள்ளதாகவும், சீன நச்சு உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.9 அமெரிக்க டொலர் தொகை இலங்கை மக்களின் பணம் என்றும் விவசாய அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார். சீன நிறுவனத்திடமிருந்து குறைந்தபட்சம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவரது அமைச்சு ஆராய்ந்ததாகவும், ஆனால் அதுவும் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சீன உர விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் கையாள்வதாக அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

தான் விவசாய அமைச்சைப் பொறுப்பேற்றதிலிருந்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக அமரவீர தெரிவித்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். சேதனப் பசளைகளுக்குப் பதிலாக இரசாயன உரங்களைப் பெறுவதற்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்ததாக கூறிய அவர், கரிம உரங்களைத் தவிர, வேறு வகையான உரங்களை உற்பத்தி செய்வதில்லை என்று சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் அவருக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் இந்த சேதனப் பசளை விவகாரம், நாட்டின் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள வெளி நாடுகளின் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. என்ற போதிலும், இரு தரப்பினரும் இந்த விஷயத்தை வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புடன் அணுகுவது கட்டாயமாகும்.

– ஆதவன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT