Monday, May 20, 2024
Home » உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் மாற்றம்

உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் மாற்றம்

by manjula
July 29, 2023 12:21 pm 0 comment

உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். மாற்றப்பட்ட அட்டவணை சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலுடன் ஆலோசித்த பின் ஒரு சில நாட்களில் இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி அகமதாபத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை 14 ஆம் திகதிக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பரிசீலித்து வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது பற்றி ஜெய் ஷா தனது அறிவிப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் போட்டி அட்டவணையால் தமது அணிகள் ஏற்பாட்டியல் பிரச்சினையை எதிர்கொள்வதாக பல நாட்டு கிரிக்கெட் சபைகளும் குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட சாத்தியம் உள்ளது” என்று டெல்லியில் கடந்த வியாழனன்று (27) நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூட்டத்தில் ஷா கூறினார். “போட்டி அட்டவணையில் இரண்டு அல்லது மூன்று போட்டி திகதிகளில் மாற்றம் செய்யும்படி பல முழு அங்கத்துவ நாடுகளும் கோரியுள்ளன. இது தொடர்பில் நாம் ஐ.சி.சியுடன் பணியாற்றி வருகிறோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் இதனை எம்மால் தெளிவு படுத்த முடியுமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிந்துக்களின் ஒன்பது நாட்கள் கொண்ட நவராத்திரி தினத்தின் முதல் நாள் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு இருக்கும் நிலையில் இந்திய–பாகிஸ்தான் போட்டிக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதில் உள்ளூர் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதை அடுத்து அந்தப் போட்டி திகதியை மாற்ற திட்டமிடப்பட்டது.

எனினும் போட்டி அட்டவணையில் மாற்றம் கொண்டு வருவதற்கு அதுதான் காரணம் என்பதை ஷா மறுத்தார். “பாதுகாப்பு தான் பிரச்சினை என்றால் அங்கு (அகமதாபாத்) ஏன் போட்டியை நடத்த வேண்டும். (ஒப்டோபர்) 14–15 பிரச்சினையல்ல. ஏற்பாட்டியல் ரீதியில் முகம்கொடுக்கும் சவாலை அடிப்படையாகக் கொண்டு அட்டவணையை மாற்ற இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் சபைகள் கோரிக்கை விடுத்துள்ளன. சில போட்டிகளுக்கு இடையே இரண்டு நாள் மாத்திரமே இடைவெளி வருகிறது. எனவே அடுத்த நாளில் பயணத்தில் ஈடுபட்டு விட்டு போட்டியில் விளையாடுவது கடினமாக இருக்கும்” என்றும் ஷா கூறினார்.

போட்டி நடைபெறும் மைதானங்கள் அப்படியே இருக்க அட்டவணை மாற்றப்படக் கூடும் என்றும் போட்டிகளுக்கு இடையிலான இடைவெளி சரிசெய்யப்படும் என்றும் ஷா குறிப்பிட்டார்.

“போட்டி இடம்பெறும் இடத்தையும் போட்டிகளையும் மாற்றமல் இருக்க நாம் முடியுமான வரை முயற்சிப்போம். மைதானத்தை மாற்றமல் இருப்பது மிக முக்கியம். போட்டிகளுக்கு இடையே ஆறு நாள் இடைவெளியை பெற்றிருக்கும் அணிகளின் இடைவெளியை நான்கு நாட்களாக குறைக்க முயற்சிப்போம். அதேபோன்று இரண்டு நாட்கள் இடைவெளி மூன்று நாட்களுக்கு அதிகரிக்கப்படும்” என்றார்.

நீண்ட தாமதத்திற்கு பின்னர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியிடப்பட்டது. முந்தைய இரண்டு உலகக் கிண்ணங்களுக்கான போட்டி அட்டவணைகள் ஓர் ஆண்டுக்கு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது.

வெளியிடப்பட்டிருக்கும் அட்டவணைப்படி உலகக் கிண்ணப் போட்டி வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அஹமதாபத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. எனினும் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கும் திகதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் ஐ.சி.சி இன்னும் வெளியிடவில்லை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT