Monday, June 3, 2024
Home » ஒரு வருட பாவங்களுக்கான பரிகாரம்

ஒரு வருட பாவங்களுக்கான பரிகாரம்

by sachintha
July 28, 2023 11:34 am 0 comment

இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு சென்றிருந்த சமயம் அங்கிருந்த யூதர்கள் நோன்பு நோற்றவர்களாக இருந்தார்கள். அதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் வினவிய போது, இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏக இறைவன் மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்) அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து அவர்களை வல்ல இறைவன் பாதுகாத்த நாளே முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாளாகும். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதற்கு ஏற்ப நாமும் நோன்பு நோற்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு யூதர்களான உங்களை விட நான் அதிகம் நெருக்கமானவன் எனக் கூறி, அவ்வருடம் முஹர்ரம் 10 ஆம் நாளன்று தாமும் நோன்பு நோற்றதோடு தம் தோழர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்கள். அத்தோடு ‘எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்’ என்றும் அன்னார் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

அதேநேரம் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ரமழான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்’ என்றும் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

இந்நபிமொழிகள் இம்மாதம் 9 ஆம் (தாசுஆ) 10 ஆம் (ஆ{ரா) தினங்களில் நோற்கப்படும் நோன்புகள் ரமழான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக விளங்குவதை எடுத்தியம்புகின்றன.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு குறித்து வினவப்பட்ட போது, ‘சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது) பரிகாரமாக அமையும்’ என்று கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்; முஸ்லிம்)

இதன்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருட காலப் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது.

ஆகவே நபி (ஸல்) அவர்களின் போதனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஆஷூரா நோன்பு தாங்கியுள்ள சிறப்புக்களை அடைந்து கொள்வதில் அக்கரை கொள்வோம்.

அஷ்ஷெய்க்
ஏ.எச்.எம்.மின்ஹாஜ் முப்தி (காஷிபி)…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT