Monday, May 20, 2024
Home » ‘சந்திரயான் -3’ வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளமைக்கு பாராட்டு

‘சந்திரயான் -3’ வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளமைக்கு பாராட்டு

- இந்திய பிரதமர் ட்விட்டரில் இடுகை

by Rizwan Segu Mohideen
July 16, 2023 10:34 am 0 comment

சந்திரனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள ட்வீட்டில், ‘இந்திய விண்வெளித்துறை வரலாற்றில் 2023 ஜுலை 14 ஆம் திகதி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த குறிப்பிடத்தக்க திட்டமானது, எமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) சந்திரனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் – 3 விண்கலத்தை ஆந்திர பிரதேசத்தின் ஶ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மத்திய நிலையத்தில் இருந்து எல்.வி.எம் -3 ரொக்கட் மூலம் வெள்ளியன்று உள்ளுர் நேரப்படி பிற்பகல் 14.35 மணிக்கு விண்ணில் ஏவியது. இதனைப் பாராட்டி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்திரனுக்கான இவ்விண்கலத்தின் பயணத்திற்கு சுமார் ஒரு மாத காலம் செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சந்திரயான் – 3 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி சந்திரனில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி விடுத்துள்ள ட்வீட்டில், ‘எங்களது விஞ்ஞானிகளுக்கு நன்றி, இந்திய விண்வெளித்துறை மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சந்திரயான்-1 நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியது. இது சந்திரனுக்கான உலகளாவிய பயணங்களின் ஒரு வழித்தடமாகக் கருதப்படுகிறது. இவ்விடயம் உலகம் முழுவதிலும் 200க்கும் மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகளில் பதிவானது.

சந்திரயான்-1 வரையும், சந்திரன் வரண்டதாகவும் புவியியல் ரீதியில் பயனற்றதும் வாழ முடியாத ஒன்றுமாகக் காணப்படுவதாக நம்பப்பட்டது. இப்போது நீர் மற்றும் துணை மேற்பரப்பு பனிக்கட்டியுடன் ஒரு மாறக்கூடிய, புவியியல் ரீதியில் சுறுசுறுப்பானதாக விளங்குவதாகக் கருதப்படுகிறது. அதனால் எதிர்காலத்தில் வசிக்கக்கூடிய இடமாக அது விளங்கலாம்’ என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு சந்திரயான் – 3 திட்டத்திற்கு நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டுள்ள பிரதமர் மோடி, சந்திரனுக்கான பயணம், விண்வெளி, விஞ்ஞானம் மற்றும் புத்தாக்கங்களில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை மேலும் அறிந்து தெரிந்து கொள்ளுமாறும் நாட்டு மக்களைக் கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT