Monday, May 20, 2024
Home » ராஜீவ் கொலை வழக்கு: இலங்கை வர அனுமதிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாந்தன் கடிதம்

ராஜீவ் கொலை வழக்கு: இலங்கை வர அனுமதிக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாந்தன் கடிதம்

by Kalky Jeganathan
July 11, 2023 10:18 am 0 comment

தன்னை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று சாந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பியுள்ளேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என்று சாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT