Monday, May 20, 2024
Home » சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவும் பாகிஸ்தானின் வளர்ச்சியும்

சீனா-பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் 10 ஆண்டு நிறைவும் பாகிஸ்தானின் வளர்ச்சியும்

by gayan
July 7, 2023 3:04 pm 0 comment

சீனா_பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டமானது, பாகிஸ்தானின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார். சீனா_ பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் தசாப்தத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தப் பாரிய திட்டம் பாகிஸ்தானின் அபிவிருத்திற்கு பாரியளவில் பங்காற்றியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

“நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்கள், வெகுஜன போக்குவரத்துத் திட்டம் மற்றும் வீதி உட்கட்டமைப்பு உள்ளிட்ட சீனா_ பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான திட்டங்கள் பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இத்திட்டமானது பாகிஸ்தான் மற்றும் சீன அரசுக்கு இடையிலான கடின உழைப்பு மற்றும் அயராத அர்ப்பணிப்பின் விளைவாகும்.

ஜூலை 2013 இல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து சீன_ பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஜூலை 5, 2013 அன்று சீனா_ பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தின் மறக்கமுடியாத ஒப்பந்த நிகழ்வை நாங்கள் கண்டோம், அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் இதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்” என்று அவர் கூறினார்.

“சீனா_ பாகிஸ்தான் பொருளாதார திட்டமானது மிகவும் வெளிப்படையான திட்டம். சீன அரசும் நிறுவனங்களும் பல திட்டங்களில் $25.4 பில்லியன் முதலீடு செய்துள்ளன. பாகிஸ்தான் மக்களின் நல்வாழ்வுக்காக சீனா இத்திட்டத்திற்கு அளித்த ஆதரவுக்காக சீன அதிபரை பாராட்டுகின்றோம். மேலும் ,பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் நிதியமைச்சர் இஷாக் தார், திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால், தொழில்முனைவோர் மற்றும் திறமையான தொழிலாளர்கள் உள்ளிட்ட அவரது குழுவினரின் அர்ப்பணிப்பையும் அவர் இங்கு நினைவு கூருகின்றோம்.

விவசாயம், சிறப்புப் பொருளாதார வலயங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கனிம வளங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டமானது ஒரு பாரிய முன்னேற்றத்தை உருவாக்கும்” என்று கூறிய அவர் கடந்த அரசாங்கம் இத்திட்டம் குறித்து தவறான எண்ணங்களை ஏற்படுத்தியதால், அது தாமதமாக செயல்படுத்தப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்திற்காக காத்திருக்கும் போது, பாகிஸ்தானை ஆதரித்ததற்காக ஜனாதிபதி ஜி மற்றும் சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஜூலை 12 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தால் முன்னர் மீறப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார். சீனா உட்பட சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்லாமிய மேம்பாட்டு நிதியம் ஆகியவை பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவின என்றும் அவர் கூறினார்.

நிதியமைச்சர் இஷாக் தார், திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால், தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் மற்றும் சீன பொறுப்பாளர் பாங் சுங்சு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT