‘இந்தியாவின் அழைப்பை ட்ரம்ப் மறுக்கவில்லை’ | தினகரன்

‘இந்தியாவின் அழைப்பை ட்ரம்ப் மறுக்கவில்லை’

அமெரிக்க ஜனாதிபதி மாளிகை விளக்கம்

இந்தியாவின் குடியரசு தினத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை அழைத்திருந்த நிலையில் அவர் மறுத்துவிட்டார் என்று வெளியான செய்தியை ஜனாதிபதி மாளிகை மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், ''ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தியாவின் குடியரசு தினத்தன்று இருப்பதால், குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை'' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் அளித்த பேட்டியில், ''2019-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார், இந்தியாவின் அழைப்பை ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்துவிட்டார் என்ற செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ''2019-ம் ஆண்டு ஜனவரி 26-ம் திகதி இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடி அழைத்துக் கௌரவித்திருந்தார். ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அந்தத் திகதியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ளன.

குறிப்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநில செனட் உறுப்பினர்களின் கூட்டம் இருக்கிறது, அதில் ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றுகிறார். இந்தியாவின் குடியரசு தின நாளின்போது எங்கள் நாட்டில் நடக்கும் நாடாளுமன்றக் கூட்டமும் நடக்கிறது. அதில் ட்ரம்ப் பேசுகிறார்.

ஆதலால் இந்தியாவின் மரியாதைக்குரிய அழைப்பை ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துவிட்டார் என்பது தவறாகும். இந்தியா, அமெரிக்கா நட்புறவில் ஜனாதிபதி ட்ரம்ப் அதிக நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டுள்ளார். குறிப்பாக பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவை ஜனாதிபதி ட்ரம்ப் வைத்துள்ளார். இரு முறை பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்த போதிலும் தொலைபேசியில் பேசிய போதிலும் அதிக நட்புறவுடன் ஜனாதிபதி ட்ரம்ப் பேசியுள்ளார். இந்தியா, அமெரிக்கா நட்புறவை வலுப்படுத்த அமெரிக்க முயன்று வருகிறது'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்கமாட்டார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது. ஆனால் நவம்பர் 30-ம் திகதி, டிசம்பர் 1-ம் திகதி ஆர்ஜென்டீனாவில் நடக்கும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப்பைச் சந்தித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...