இறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி | தினகரன்

இறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

 இறக்குவானை, கஹவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி-Rakwana Kahawatta-Panapitiya North-47 Year Old Killed

 

இறக்குவானை, கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

நேற்று (12) இரவு 8.00 - 8.30 மணியளவில், பனாபிட்டிய வடக்கு, கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் மரணமடைந்ததாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஹெட்டிகந்தலாகே விஜேரத்ன என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது இரு பிள்ளைகளுடனும் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தங்களது காணிக்கு அருகில் மின்கல விளக்கொன்று (டோர்ச்) எரிவதை கண்டு, வீட்டின் முன் கதவை திறந்து வெளியில் சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஓரிரு நிமிடங்களில் துப்பாக்கிச் சூட்டு சத்தமொன்று கேட்டதைத் தொடர்ந்து, வீட்டிலுள்ளோர் வெளியில் சென்ற பார்வையிட்டுள்ளனர். இதன்போது, குறித்த நபர் காயமடைந்த நிலையில் கீழே வீழ்ந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை கஹவத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளையில் அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் இது வரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, சந்தேகநபரை கைது செய்வது தொடர்பில், இறக்குவானை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...