ஐ.தே.கவின் 72 ஆவது தேசிய மாநாடு இன்று | தினகரன்

ஐ.தே.கவின் 72 ஆவது தேசிய மாநாடு இன்று

 

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை 9.30 மணிக்கு மாநாட்டை வெகு சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார். "பணி செய்யும், பணி செய்த, கட்சியின் 72ஆவது மாநாடு" என்பதே இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளென்றும் அமைச்சர் கூறினார். ஐ.தே.க வின் 72 ஆவது மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஐ.தே.கவி 72 ஆவது...

தலைமையில் நேற்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இம் மாநாட்டில் ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதன் சிரேஷ்ட அங்கத்தவர்களும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி 24 வருடங்களுக்குப் பின்னர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பதவியை கைப்பற்றுமென்றும் அதனைத் தொடர்ந்து நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிலைநிறுத்தப்படுவது உறுதியென்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார். கடந்த 24 வருடங்களாக ஐ.தே.க அரச பதவியை கைப்பற்றத் தவறி விட்டது. ஆனால் இனி அந்நிலைமை கட்சிக்கு ஏற்படாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது உறுதியென்றும் அவர் கூறினார்.

"ஜனாதிபதி தேர்தல் எமக்கு சாதகமாக அமையுமென்பதில் பூரண நம்பிக்ைகயுண்டு. அதில் நாம் ஆகக்கூடிய வெற்றியை பெறுவோம். மொட்டுக் கட்சிக்கு 40 சதவீதமானவர்களின் ஆதரவே உள்ளது. ஆனால் அவர்களை 60 சதவீதமானவர்கள் எதிர்க்கிறார்கள். இதனடிப்படையில் எமக்கே பெரும்பான்மை ஆதரவு உண்டு. இந்த ஆதரவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் எமக்கு கிடைத்துள்ளன," என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

"அதற்காக நாம் மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை. அதிலும் நாம் வென்று காட்டுவோம். ஜனாதிபதி தேர்தலுக்கிடையில் இடம்பெறக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் நாம் ஆகக்கூடிய வெற்றி பெறுவது உறுதி. அதற்கான மக்கள் பலம் எம்மிடம் உள்ளது," என்றும் அமைச்சர் கூறினார்.

தேர்தல் உரிய நேரத்துக்கு இடம்பெற வேண்டும். புதிய முறையை ஏற்றுக்ெகாள்ள காலம் தேவைப்படுமாயின் பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே ஐ.தே.கவின் விருப்பம். இதனை நாம் தேர்தல் ஆணையாளரிடமும் தெரிவித்துள்ளோம். அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சினைகள் இருந்ததன் காரணமாகவே அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்காக தொடர்ந்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதனை நாம் விரும்பவில்லை என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

(லக்ஷ்மி பரசுராமன்)

 


Add new comment

Or log in with...