Monday, June 17, 2024
Home » காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவமனைகள் முக்கிய இலக்கு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவமனைகள் முக்கிய இலக்கு

எரிபொருள் இன்றி மற்றொரு மருத்துவமனை செயலிழப்பு

by mahesh
May 25, 2024 9:27 am 0 comment

காசாவில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு மேலும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மருத்துவமனைகளும் இலக்கு வைக்கப்படும் நிலையில் மத்திய காசாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மின்பிறப்பாக்கிகள் எரிபொருள் இல்லாததால் செயலிழந்திருக்கும் சூழலில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் தெற்கில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேலிய படைகள் மக்கள் செறிந்து வாழும் பகுதியை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருவதோடு வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் கிழக்கு ரபாவில் இருந்து மையப் பகுதியின் ஊடாக ஷபூரா அகதி முகாமின் புறநகர் பகுதியை அடைந்திருப்பதோடு அங்கு கடுமையான பிராங்கி தாக்குதல் சத்தங்கள் கேட்டு வருவதாக பலஸ்தீன உத்தியோகபூர் செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

ராபவுக்கு வெளியில், தெற்கு காசாவில் தற்போது இயங்கும் மிகப்பெரிய மருத்துவமனையான ஐரோப்பிய காசா மருத்துவமனைக்கு மேலால் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் வட்டமிடுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரபாவின் மேற்கில் உள்ள சனநெரிசல் மிக்க யிப்னா மாவட்டத்தை நோக்கி இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் முன்னேறுவதாக முன்னதாக செய்தி வெளியாகி இருந்தது.

ரபா போன்று வடக்கு காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை மோசமடைந்து வருகின்றன. கமால் அத்வான் மருத்துவமனை கடந்த வியாழக்கிழமை இரவு இரு முறை இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதோடு அல் அவ்தா மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனை கதவுகள் உட்பட மருத்துவனைகளின் அனைத்தையும் இஸ்ரேலிய படையினர் அழித்து வருவதாக அல் அவ்தா மருத்துவமனையின் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். படையினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்கு அம்புலன்ஸ் வசதியை தரும் வரை அங்கிருந்து வெளியேற சில மருத்துவ பணியாளர்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதே நேரம் மத்திய காசாவின் அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மின் பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன. அளவுக்கு அதிகமானோர் நிரம்பி வழியும் இந்த மருத்துவமனையில் பெரும்பாலான உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நோயாளிகளுக்கு வெறுங்கைகளால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனையின் பேச்சாளரான கலீல் அல் டெக்ரான், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

‘இது அதிகமான நோயுற்ற மற்றும் காயமடைந்தவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாகக் கூடும்’ என்று கூறி அல் டெக்ரான், சில நோயாளர்கள் தரையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனை இயங்குவதற்கு நாளொன்றுக்கு 5,000 லீற்றர் எரிபொருள் தேவைப்படும் நிலையில் கடந்த புதன்கிழமை 3,000 லீற்றர் மாத்திரமே கிடைத்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அல் அக்ஸ் தியாகிகள் மருத்துவமனை செயலிழந்த நிலையில் மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் இன்னும் இரண்டு மருத்துவமனைகளே தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா. அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

காசாவுக்கு உதவிகள் வரும் பிரதான வாயிலாக இருந்த எகிப்துடனான ரபா எல்லையை இஸ்ரேலியப் படை கடந்த மே 6 ஆம் திகதி கைப்பற்றியது. குறிப்பாக இந்த வழி ஊடாகவே காசாவுக்கு எரிபொருள் சென்றது.

காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நாவுக்கு நாளொன்று 200,000 லீற்றர் தேவைப்படுகிறது. எனினும் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் எரிபொருள் கிடைப்பது சீரற்ற வகையில் இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி தெரிவித்துள்ளார். ஐ.நாவுக்கு கடந்த ஞாயிறன்று 70,000 லீற்றரும், செவ்வாயன்று மேலும் 100,000 லீற்றருமே எரிபொருள் கிடைத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு காசாவின் ஜபலியா நகரில் இரு வெவ்வேறு பதில் தாக்குதல்களில் இஸ்ரேலிய மெகாவா 4 டாங்கிகள் மூன்றை போராளிகள் இலக்கு வைத்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படை குறிப்பிட்டது. ஜபலியா அகதி முகாமில் உள்ள அஜர்மா வீதியில் வைத்து இரு டாங்கிகளை அல் யாஸின் 105 ரொக்கெட்டுகள் மூலம் தாக்கியதாக டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முகாமின் அல் சாசீப் பகுதியில் வைத்து மற்றொரு டாங்கியை வெடிக்கச் செய்ததாகவும் அது கூறியது.

3 பணயக்கைதிகளின் உடல்கள் மீட்பு

ஜபலியாவில் நகர்புற போர் நீடிப்பதோடு அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் மூன்று பணயக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் சானன் யப்லொங்கா, பிரேசிலிய இஸ்ரேலியரான மைக்கல் நிசன்பவும் மற்றும் பிரான்ஸ்-மெக்சிகோவைச் சேர்ந்த ஒரியோன் ஹர்னன்டஸ் ரடொக்ஸ் ஆகியோரின் உடல்களை மீட்டதாகவும் அது தொடர்பில் அவர்களின் குடும்பத்தினர் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த இராணுவம் குறிப்பிட்டது.

இவர்கள் அனைவரும் காசா போரைத் தூண்டிய ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்கள் என்று இஸ்ரேல் இராணுவம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் 7 தாக்குதலின்போதும் 250க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளால் பிடிக்கப்பட்ட நிலையில் காசாவில் தொடர்ந்தும் 130 பேர் வரை பணயக்கைதிகளால் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

காசாவில் தொடர்ந்து 231 ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல் அயூபி குடும்பத்துக்கு சொந்தமான குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

வடக்கு காசாவில் பல வீடுகளையும் இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் வடக்கில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். ஜபலியா அகதி முகாமுக்கு அருகில் அல் பக்ஹுரா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மத்திய காசாவில் அஸ் ஸாவியா நகரில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு மாதங்களாக நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 35,800ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை புதுப்பிக்கும் வகையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் இஸ்ரேலிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாரிஸ் பயணமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஸ்தம்பித்திருக்கும் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் விருப்பத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT