பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியிலும் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 2–0 என கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளது அமெரிக்க அணி.
டெக்ஸாஸில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் அணித் தலைவர் மொன்க் படேலின் 42 ஓட்டங்களுடன் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அமெரிக்க அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் 145 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 78 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையில் இருந்தபோதும் கடைசி எட்டு விக்கெட்டுகளையும் 60 ஓட்டங்களுக்குள் இழந்தது.
வேகப்பந்து வீச்சாளரான அலிக்கான் 25 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ (36) மற்றும் முன்னாள் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் (30) அதிகபட்ச ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணி 19.3 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.