Monday, June 17, 2024
Home » கனிம வளங்களுக்காக கடலைக் கிளறி வரும் சீனா!

கனிம வளங்களுக்காக கடலைக் கிளறி வரும் சீனா!

by Rizwan Segu Mohideen
May 25, 2024 12:42 pm 0 comment

இந்த பூமிப் பந்தில் புதைந்திருக்கும் பொக்கிஷங்கள் என்ன? பூமிப் பந்தை உருட்டோ உருட்டு என உருட்டி தேடிக் கொண்டிருக்கிறது சீனா. உலகில் புதைந்துள்ள அனைத்து கனிம வளங்களிலும் அது கண்ணை வைத்து கருமமாற்றி வருவதாக பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது.

ஆழ்கடல் அகழ்விலும், சுரங்க அகழ்விலும் சீனா தனது அதீத ஆர்வத்தைக் காட்டி வருகிறது. உலகின் மிகவும் மதிப்பு மிக்க கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளில் சீனா இந்த கனிம வேட்டையை ஆரம்பித்துள்ளது. வெள்ளை இரும்பு, தாமிரம் போன்ற பூமியின் அரிதான கனிம கூறுகளையும், உலோகங்களையும் அடைந்து கொள்வதற்கான சீனாவின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பூமிக்குள் பரந்து விரிந்து புதைந்துள்ள பெறுமதிமிக்க கனிம வளங்களான இந்த உலோகங்கள், நவீன அறிவியல் சார்ந்த உயர் தொழில்நுட்ப சாதனங்களை வடிவமைப்பதற்கு இன்றியமையாத மூலப்பொருளாகும்.

மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களை (பெட்டரி) உருவாக்குவதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களின் உற்பத்திக்கும் இந்த கனிம வளங்கள் இன்றியமையாத கூறுகளாக அமைந்திருக்கின்றன.

கடலுக்கு அடியில் புதைந்து, மறைந்திருக்கும் இந்த அரிய உலோகங்களின் செல்வத்தை தன்னகத்தே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவாவில் சீனா முழு மூச்சாக கடலின் அடித்தளங்களை கிளற ஆரம்பித்துள்ளதாக அறியவருகிறது. சக்திமிக்க இந்த கனிமங்களை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் ஒரு ஆதிக்க சக்தியாய் எழுந்து நிற்கலாம் என்று சீனா கணக்கு போட்டு இருக்கிறது என்பது பல நாடுகளின் குற்றச்சாட்டாகும்.

உலகம் முழுவதும் புதைந்துக் கிடக்கும் இந்த பெறுமதிமிக்க கனிம வளங்களைக் கையகப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் இதன் விநியோகச் சங்கிலியை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள சீனா கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகிறது என்பது தான் அந்த நாடுகளின் கருத்தாகும்.

உலகளாவிய வர்த்தகத்திலும் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வடிவமைப்பதிலும் சீனாவிற்கு இருக்கும் எதிர்பார்ப்பை இந்த ஆழ்கடல் ஆய்வு மற்றும் சுரங்க அகழ்வு நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் வலுவூட்டி வருகின்றன.

மேம்பட்ட தொழில்நுட்பங்களும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி உற்பத்திகளும் புவிசார் அரசியல் இயக்கவியலை வடிவமைப்பதில் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது.

நாளைய உலகை ஆக்கிரமிக்கவுள்ள இந்த நவீன தொழில் நுட்பங்களின் மூலக் கூறுகளாக திகழும் கனிம வளங்கள் நிலத்திலும், கடலின் ஆழ் தளத்திலும் புதைந்து கிடக்கின்றன.

சீனாவின் அதிநவீன ஆழ்கடல் ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான 5,100 டன் எடையுள்ள “தயாங் ஹாவ்” என்ற கப்பல் ஆழ்கடல் ஆய்விலும் அகழ்விலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. “முயற்சி, ஆய்வு, பங்களிப்பு.” என்ற சுலோகத்தோடு இந்தக் கப்பல் பல கடல்பிராந்தியங்களில் சுற்றிக் கொண்டு கனிம வள கையப்படுத்தும் தனது காரியத்தை மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு வருகிறது.

பசிபிக் பெருங்கடலிலும், ஜப்பான் மற்றும் ஹவாய் நாடுகளுக்கிடையே அமைந்துள்ள 28,500 சதுர மைல் பரப்பிலும் தயங் ஹாவ் என்ற இந்த சீனக் கப்பல் சென்று ஆய்விலும் அகழ்விலும் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த பிராந்தியத்தில், மிகப்பெரிய அளவிலான கனிம வளப் பாறைகளை ஆராய்ந்து பிரித்தெடுக்கும் பிரத்யேக உரிமைகளை சீனா பெற்றுள்ளது.

கடலின் ஆழத்தில் புதைந்துக் கிடக்கும் இந்த கனிம வளப் பாறைகள் விலைமதிப்பற்றவை, மிகவும் பெறுமதிமிக்கவை. இவை பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானவை மட்டுமல்ல, டிரில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ளவை. இந்த கனிம வளங்களை சீனா கைப்பற்றும் நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள அரிய, பெறுமதிமிக்க வளங்களை அடைவதில் அதன் மூலோபாய ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

சர்வதேச கடற்பரப்பு ஆணைக்குழு (International Seabed Authority – ISA) என்பது ஜமைக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள அரசுகளுக்கிடையேயான ஒரு சா்வதேச அமைப்பாகும். இது 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட மாநாட்டின் போது நிறுவப்பட்டது. தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் புதைந்து கிடக்கும் அனைத்து கனிமங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்படுத்துவதும் இந்த அமைப்பின் பொறுப்பாகும்.

இந்த சர்வதேச கடற்பரப்பு ஆணைக்குழுவினால் (ISA) வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ஆய்வு உரிமங்களை தற்போது சீனா பெற்றுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் இன்றுவரை வழங்கப்பட்ட 30 உரிமங்களில் மொத்தம் ஐந்து உரிமங்களை சீனா தன்வசம் வைத்துள்ளது.

இந்த உரிமங்கள் ஆழ்கடல் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனாவுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது. இந்த உரிமம் மூலம் 2025ம் ஆண்டு முதல் ஆழ்கடல் அகழ்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச கடற்பரப்பில் 92,000 சதுர மைல் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான பிரத்யேக உரிமையை சீனா பெற்றிருக்கிறது.

கடலுக்கடியில் சீனாவின் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பகுதி பிரித்தானிய நாட்டின் நிலப் பரப்பளவிற்குச் சமமானதாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆழ்கடல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கடற்பரப்பு ஆணைக்குழுவினால் (ISA) ஆல் உரிமம் வழங்கப்பட்டுள்ள மொத்தப் பரப்பளவில் சுமார் 17 சதவீதத்தை சீனா பெற்றிருக்கிறது.

இவற்றைப் பார்க்கும் போது, உலகின் கனிம வளங்களைக் கொள்ளையிடும் போட்டிக்கான அடுத்த போர்க்களமாக கடல் ஆழ் தளம் மாறப்போகிறது என்பது மட்டும் புரிகிறது. கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்காக கடலின் ஆழ் தளத்தைக் கிளறும் இந்தக் கொடுமையான போட்டியில் சீனா ஒரு முன்னணி பாத்திரத்தை வகித்து வருகிறது.

நிலத்தை விட, கடலின் ஆழ் தளத்தில் பல மடங்கு அரிய கனிம வளங்கள் புதைந்து கிடப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் இந்த கனிமங்களை நவீன மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திகள், கையடக்க தொலைபேசிகள், கணினி உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்திக்கு முக்கியமானவையாகும்.

சதா உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், இயற்கை அனர்த்தங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் கரியமில வாயுவின் உமிழ்வைக் குறைக்கும் பந்தயத்தில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் உலகிற்கு, இந்த அரிய கனிமங்களின் தேவை மிகவும் அவசியமானதாக உணரப்படுகிறது.

இந்த பெறுமதிமிக்க வளங்களை அடையவதற்கு ஆர்வம் கொள்ளும் ஆதிக்க சக்திகள், நவீன தொழில் நுட்பங்களுடனான தமது எதிர்கால வளர்ச்சிக்காக, கடலின் ஆழ் தளத்தை நோக்கிய போர் ஒன்றுக்காக நகர்ந்து வருகின்றன.

இதன் அடிப்படையிலேயே ஆழ்கடல் அகழ்வுத் துறையில் களமிறங்கியுள்ள சீனா இந்த அரிய கனிமங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மிகுந்த ஆர்வம் காட்டடி வருகிறது.
எரிபொருள் பாவனையிலிருந்து விலகி மின்கலங்களின் பக்கம் திரும்ப வேண்டியதன் அவசியத்தை உலகம் உணர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் மின்கலங்களின் (பெட்டரி) உற்பத்திற்கு மூலக் கூறாகும் லித்தியம் என்ற கனிமத்தின் தேவை மிகவும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்கலங்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சீனா முன்னணியில் இருக்கிறது. தற்போது, சீனா உலகின் அரிய வகையான உலோக விநியோகத்தில் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

லித்தியம் என்ற கனிமத்தைப் பயன்படுத்தி உலகிற்கு தேவையான மின்கலங்களின் முக்கால்வாசியை சீனாவே உற்பத்தி செய்கிறது. புதை வடிவ எரிபொருள்களிலிருந்து விடுபட்டு சூழலுக்கு தீங்கு விளைவிக்காத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தியை உருவாக்குவதற்கு மின்கல பாவனை சிறந்த மாற்றீடாகும். எனவே சுத்தமான ஆற்றல் சக்தி தொழில்நுட்பங்களுக்கு அவசியமான முக்கிய கனிம கூறுகளின் மீது சீனா தனது ஆா்வத்தையும், கட்டுப்பாட்டையும் நிலத்திலும், கடலிலும் விரிவுபடுத்தி வருகிறது.

சீனாவின் இந்த ஆழ்கடல் அகழ்வு மற்றும் சுரங்க அகழ்வு முயற்சிகள், எதிர்காலத்தில் தனது தொழில்நுட்பத்தையும்,பொருளாதார மேலாதிக்கத்தையும் தக்கவைப்பதற்கான ஓர் ஆதிக்க முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஊடாக ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு, ஏனைய நாடுகளை ஆட்டுவிப்பதையே தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதையே இந்த கனிம வள ஆதிக்கம் கட்டியம் கூறுகிறது.

– சூரியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT