Sunday, June 16, 2024
Home » வரிக்குறைப்பை அமுல்படுத்தினால் மீண்டும் வரிசை யுகம் உருவாகும்

வரிக்குறைப்பை அமுல்படுத்தினால் மீண்டும் வரிசை யுகம் உருவாகும்

by sachintha
May 23, 2024 8:25 am 0 comment

வரிக் கொள்கை மறுசீரமைக்கப்படமாட்டாது

 

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் வரிக் குறைப்பை மேற்கொண்டால், 06 மாத காலத்துக்குள் மீண்டும் மக்கள் வரிசை யுகத்துக்கு செல்ல நேரிடுமென, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் எக்காரணம் கொண்டும் தற்போதைய வரிக் கொள்கையை மறுசீரமைக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2024 இல், வரி வருமானமாக 3,870 பில்லியன் ரூபாவையும், மொத்த வருமானமாக 4,127 பில்லியன் ரூபாவையும் திரட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதல் காலாண்டில் மாத்திரம் 1,040 பில்லியன் ரூபா வரி வருமானமும், 1,521 பில்லியன் ரூபா மொத்த வருமானமும் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி குறிப்பிடுவது போன்று வரி குறைப்பு செய்தால், அரச வருமானத்தில் 25 சதவீதத்தை நேரடியாக இழக்க நேரிடும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினர் பொருளாதார பாதிப்பை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளவும், இன்னொரு தரப்பினர் தற்போதைய பொருளாதார முன்னெடுப்புகளை பலவீனப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரிகள் தமது ஆட்சி வரும்போது 24 சதவீதத்தால் குறைக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது. வரி குறைப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிடும் இவர்கள்,தமது ஆட்சியில் மீண்டும் வரிகளை குறைப்பதாக தெரிவிப்பது விந்தையாக உள்ளது.

அரசியல் வாக்குறுதிகளுக்கு அமைய வரி குறைப்பு செய்தால், ஆறு மாத காலத்துக்குள் மீண்டும் மக்கள் வரிசை யுகத்துக்கு செல்ல நேரிடும் என்பதை உறுதியாக கூற முடியும். அதனைக் கவனத்திற்கொண்டு தற்போதைய வரிக்கொள்கைகளில் திருத்தம் செய்யப் போவதில்லை. நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதை தடுக்கும் வகையிலேயே நிதி முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்தை எதிர்பார்ப்பவர்களே, இந்த சட்டமூலங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT