Saturday, May 18, 2024
Home » ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைகள் உடன் கண்டறியப்பட வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைகள் உடன் கண்டறியப்பட வேண்டும்

கொச்சிக்கடை நினைவேந்தல் நிகழ்வில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

by damith
April 22, 2024 6:15 am 0 comment

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறியும் வகையில், சுதந்திரமானதும் நியாயமானதுமான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீதியை மறைத்து வைக்க முடியாது என்றும் அனைத்து உண்மைகளும் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம் பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனையொட்டிய விசேட நினைவேந்தல் நிகழ்வுகள், ஆராதனை வழிபாடுகள் என்பன நேற்று கொழும்பு கொச்சிக் கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றன.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் மரணம் அடைந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டு இந்த விஷேட நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து மதத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பெரும்பாலான விசுவாசிகளும் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியும் விசேட வழிபாடுகளும் நேற்று காலை இடம் பெற்றன.

ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டு காலை 8. 45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்தும் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரிக்கு அருகிலிருந்தும் இரண்டு நடை பவனிகள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT