Friday, May 3, 2024
Home » இந்திய தேர்தலின் முதற்கட்டம் தமிழ்நாட்டில் நேற்று ஆரம்பம்

இந்திய தேர்தலின் முதற்கட்டம் தமிழ்நாட்டில் நேற்று ஆரம்பம்

அண்ணாமலை, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாக்களிப்பு

by gayan
April 20, 2024 11:40 am 0 comment

இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று (19) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 07 கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. முதற்கட்டமாக

தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலுள்ள ஒரு தொகுதியிலும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து தி.மு.க. தரப்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க. சார்பாக சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கிறார். அண்ணாமலை போட்டியிடுவதால், கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தனது வாக்கைச் செலுத்தினார்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். தனது வாகனத்தை வாக்குச்சாவடியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் நிறுத்திவிட்டு தனது மனைவி துர்காவுடன் நடந்துசென்று வாக்களித்தார்.

மேலும் தனக்கு முன்னதாக காத்திருந்த வாக்காளர்களோடு வாக்காளர்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

அதேபோன்று நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய், நடிகை குஷ்பு, சுந்தர் சீ, உள்ளிட்டோரும் நேற்று வாக்குகளை பதிவு செய்தனர்

தற்போது ஆட்சியிலுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பதவிக்காலம் இந்தாண்டு ஜூன் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் புதிய பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 16ஆம் திகதி இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.

நேற்று 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றதுடன், இம்மாதம் 26ஆம் திகதி 89 தொகுதிகளுக்கும் மே 07ஆம் திகதி 94 தொகுதிகளுக்கும் மே 13ஆம் திகதி 96 தொகுதிகளுக்கும் மே 20ஆம் திகதி 49 தொகுதிகளுக்கும் மே 25ஆம் திகதி 57 தொகுதிகளுக்கும் ஜூன் 01ஆம் திகதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளன.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்களும் புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஜூன் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமெனவும், இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படுவதுடன், உலகின் மிகப்பெரிய தேர்தல்களில் ஒன்றாக இந்திய பாராளுமன்ற தேர்தல் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT