Monday, May 20, 2024
Home » 18ஆம் திகதிக்கு முன் அஸ்வெசும கொடுப்பனவு வழங்க தீர்மானம்

18ஆம் திகதிக்கு முன் அஸ்வெசும கொடுப்பனவு வழங்க தீர்மானம்

புதிதாக மேலும் 182,140 குடும்பங்கள் இணைப்பு

by Gayan Abeykoon
April 11, 2024 10:29 am 0 comment

அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவு திட்டத்துக்கு மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 140 குடும்பங்கள் புதிதாக தகைமை பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க  தெரிவித்துள்ளார்.  ஆட்சேபனைகள் மற்றும் எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு அவற்றை பரிசீலித்த பின்னர் இந்த புதிய எண்ணிக்கையானோர் கொடுப்பனவுகளுக்கு தகைமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,   அவர்களுக்குரிய நிலுவைப்பணம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மொத்தமாக 18 இலட்சத்து 54,000 பேர் அஸ்வெசும கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்களாக உள்ளதுடன், அதற்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபா நிதியை செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து தகவல்களையும் பூரணப்படுத்தியுள்ள 200,000 குடும்பங்கள் இதுவரை அவர்களது வங்கிக் கணக்கை ஆரம்பித்தல் மற்றும் அது தொடர்பான தகவல்களை புதுப்பிக்காமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பில் பிரதேச செயலகங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் மேற்படி குடும்பங்களின் உறுப்பினர்களிடமிருந்து அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவுகள் இரண்டாம் கட்டத்துக்காக 4 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் 2 இலட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது உரிய கட்டமைப்புக்குள் உள்வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான நடவடிக்கைகள் மே மாதம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ள அவர், அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அதற்காக இம்முறை வரவு, செலவுத் திட்டத்தின் மூலம் 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT