Thursday, May 16, 2024
Home » பண்டிகைக் காலத்துக்கென விசேட ரயில், பஸ் சேவைகள்
வழமையான தூர இடங்களுக்கு மேலதிகமாக

பண்டிகைக் காலத்துக்கென விசேட ரயில், பஸ் சேவைகள்

எவ்விதமான குறைபாடுகளும் ஏற்படாதென அமைச்சர் பந்துல உறுதி

by Gayan Abeykoon
April 11, 2024 11:50 am 0 comment

 பண்டிகை காலத்துக்காக போக்குவரத்து அமைச்சினால் விசேட இணைந்த போக்குவரத்து வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் ஆகியன இணைந்து இந்த முறையான போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிற்கின்றன. கடந்த வருடங்களில் பல்வேறு காரணங்களால் தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டதால் இம்முறை 2024ஆம் ஆண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது .

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவைகளை வழங்குவது, போக்குவரத்து அமைச்சின் பொறுப்பாகும் எனவும், மக்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த இணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மற்ற ஆண்டுகளை விட போக்குவரத்தை அதிகரித்து மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில்  இணைந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் என்பன இணைந்து விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதுடன், ​விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்திலுள்ள சிரமங்கள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து திட்டத்தின் பிரகாரம் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரையிலும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரையிலும் அதிகரித்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அதிவேக நெடுஞ்சாலையின் மேலதிக சேவைகளின் எண்ணிக்கையை நாளாந்தம் 150ஆக அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பஸ் வண்டிகளுக்காக விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்காக 1990 ஆம்புலன்ஸ் சேவை, குடிநீர் வசதி, காத்திருப்புப் பகுதிகள் போன்றனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ரயில் சேவைகளுக்கு இணையாக மாகாண வீதி பயணிகள் போக்குவரத்தை அதிகரித்து அவர்களின் பயணங்களை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர 05 நடமாடும் பரிசோதனை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் , போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்கும் வசதியும். உள்ளது.

அதன்படி  24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் 071-2595555 என்ற இலக்கத்துக்கு வாட்ஸ்அப் ஊடாகவும் பயணிகளின் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

பிரதான பாதைகளில் தினமும் நடத்தப்படும் நீண்டதூர சேவைகளுக்கு மேலதிகமாக, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு ஒரு கடுகதி ரயிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு கடுகதி ரயிலும் நேற்று 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 15வரை இயக்கப்படுமென மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு தகவல் மற்றும் முறைப்பாடுகளை வழங்குவதற்காக 1971 என்ற Hot Line இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சிறப்பு போக்குவரத்து திட்டத்தின்படி, ஒருங்கிணைந்த முறையில் போக்குவரத்து சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரி நீண்டதூர ரயில் சேவைகள் குறிப்பிட்ட இலக்குகளை நெருங்கும் போது பயணிகளுக்கு அங்கிருந்து செல்லும் நோக்கில் போக்குவரத்து வசதிகள் செய்யப்படுமென்று அவர் கூறினார்.

மட்டக்களப்பு, திருகோணமலைக்கு செல்லும் பயணிகளுக்கு நீண்டதூர சேவைகள் வழங்கப்படும்., யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டாலும் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி இரண்டு ரணில் சேவைகள்செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பயணிகளுக்கு அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு போக்குவரத்து வசதிகள் மஹவ அல்லது ரயில் மூலம் இ.போ.ச மற்றும் மாகாண போக்குவரத்து சேவையுடன் இணைந்து இந்த வசதியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT