Monday, May 20, 2024
Home » ஈதுல் பித்ர் பெருநாள் எமது வாழ்வின் பொன்னாள்

ஈதுல் பித்ர் பெருநாள் எமது வாழ்வின் பொன்னாள்

by Gayan Abeykoon
April 10, 2024 1:36 pm 0 comment

 அல்லாஹ்வின் பேரருளினால், கடந்த றமழான் மாதத்தின் முப்பது நாட்களும் நோன்பிருந்து, இரவு பகலாக இறை வணக்கத்திலும், அல்-குர்ஆன் திலாவத்திலும், எம்மோடு ஒன்றித்து வாழும் ஏழை, எளியவர்களுக்கு ஸகாத், ஸதக்கா பகிர்ந்தளித்தும் மொத்தத்தில் எமது அனைத்து செயற்பாடுகளிலும் இறைநேசத்தையும் அவனின் பேரருளையும் சம்பாதித்துக் கொண்ட நாம், இன்று ஷவ்வால் மாதம் முதலாம் நாளில் – ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். எமது தியாகத்துக்கும், இறைவனுக்கான அர்ப்பணிக்கும் வல்ல அல்லாஹ் எமக்களித்த மகிழ்ச்சி, குதூகலம் நிறைந்த பேரருளே இன்றைய பெருநாளாகும்.  

நாம் நோற்ற இந்த றமழான் மாதத்தின் முப்பது நோன்புகளும் இறைவனைப் பொறுத்தவரை சாதாரணதொரு வணக்க வழிபாடல்ல. அது இஸ்லாம் எமக்கு விதியாக்கியுள்ள ஏனைய அமல்களை விட மகப் பெறுமதியானதும், அல்லாஹ் தனக்கே உரியதென சொந்தமானதாக உரிமை கொண்டாடும் ஒரு பெறுமதியான இபாதத்தாகும்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு வந்ததன் பின் அங்குள்ள மக்கள் இரண்டு நாட்களாக விளையாட்டு வேடிக்கைகளில் ஈடுபட்டு, அந்நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இதைக் கண்ணுற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் இந்நாட்களில் என்ன சிறப்புக்காக இவ்வாறு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்’ என வினவியபோது, ‘அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் இவ்வாறு கொண்டாடி விளையாடக் கூடியவர்களாக இருந்தோம்’ என்றார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அந்த இரு நாட்களை விட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ளான். அவைதான் ஹஜ்ஜூப் பெருநாளும், நோன்புப் பொருநாளுமாகும் என்றார்கள்.

அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான சூறத்துல் பகறாவில் 185ஆவது வசனத்தில் ‘றமழான் மாதத்தில் நோன்பு கடமையாகும்’ என்று கூறிவிட்டு, அவ்வசனத்தின் இறுதியில் ‘அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப்படுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்’ எனக் குறிப்பிட்டுக் கூறுவதால்) இந்நாள் இறைவனை நினைவு கூர்ந்து புகழக் கூடிய இனிய நாள் என்பது வெளிப்படுகின்றது.

பெருநாட்களின் சிறப்புப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

‘எவனொருவன் இந்த இரண்டு பெருநாட்களின் இரவுகளிலும் உள்ளச்சத்தோடு நின்று வணங்குவானோ அவனது கல்பு (உள்ளம்) ஏனைய உள்ளங்கள் இறந்து விடும்போது இறந்து விடாது’ (அறிவிப்பவர்: அபீ உமாமா (ரழி)

மீண்டும் ஒருமுறை கூறினார்கள்:

‘இந்த ஐந்து இரவுகளையும் எவர் ஹயாத்தாக்குகிறாரோ (உயிர்ப்பிக்கிறாரோ) அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. அவைகள் ‘அய்யாமுத் தஷ்ர்க்குடைய மூன்று நாட்களும், அறபாவுடைய நாளும், ஹஜ்ஜூப் பொருநாளுடைய தினமும், நோன்புப் பெருநாள் தினமும், ஷஃபான் மாதத்தின் அரைப் பகுதி இரவும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரழி)

நோன்புப் பொருநாள் சிறப்பு பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘நோன்புப் பெருநாள் வந்துவிட்டால், மலாயிக்கா மார்கள் என்னும் அமரர்கள் பாதைகளிலுள்ள ஒவ்வொரு கதவுகளிலும் நின்று கொண்டு பின்வருமாறு அழைப்பு விடுப்பார்கள். ‘முஸ்லிம் சமூகமே! சங்கையான இறைவனின் பக்கம் விரையுங்கள். அவன் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை அருள் புரிவான். அவர்கள் மீது அளவிட முடியாத பிரதிபலன்களை அவன் கூலியாகத் தருவான். இரவில் நின்ற வணங்குமாறு நீங்கள் ஏவப்பட்டீர்கள். அவ்வாறே (இரவு முழுவதும்) நின்று வணங்கினீர்கள். இந்நாட்களில் பகல் பொழுதிலே நோன்பு நோற்குமாறு ஏவப்பட்டீர்கள்.

அவ்வாறே நீங்களும் (பகல் முழுவதும் நோன்பு நோற்றீர்கள். உங்கள் இரட்சகனை வழிபட்டீர்கள். உங்களக்குரிய நற்கூலிகளை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் ஸலவாத்து சொல்லும் போது ஒரு அழைப்பாளன் பின்வருமாறு (மலக்கு) அழைப்பு விடுப்பார்’ நிச்சயமாக உங்களின் றப்பு உங்களின் (பாவங்களை) மன்னித்து விட்டான். நீங்கள் நேர்வழி பெற்றவர்களாக திரும்புங்கள். இது கூலி தரப்படும் நாளாகும். விண்ணுலகத்தில் இந்த நாளுக்கு ‘கூலிக்குரிய நாள்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. (தபராணி)

‘பெருநாள் அன்று முதல் கடமையாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கேற்பு, பெருநாள் தொழுகையை சூரியன் உதயமான சிறிது நேரத்தில் தொழுவதுதான் சிறப்பான செயலாகும் என இப்னு உமர் (ரழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

எம்மீது கடமையான ஐவேளைத் தொழுகையை கூட்டாக மஸ்ஜிதுகளுக்கு சென்று நிறைவேற்றச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை மைதானம் அல்லது திறந்தவெளிகளில் நிறைவேற்றுபவராக இருந்தார்கள். அவ்வாறு மைதானம், அல்லது திறந்த வெளிகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது நபி வழி என்பது இமாம்களின் அபிப்பிராயமாகும். பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுவதற்கு அனுமதி அளித்த பெருமானார் (ஸல்) அவர்கள், பெருநாள் தினங்களில் பெண்கள் திடலுக்கு அல்லது மைதானத்துக்கு வருவதை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள். ‘மேலங்கி (பர்தா) இல்லாத பெண்கள், தங்கள் தோழிகள் அல்லது சகோதரிகளிடம் இரவல் வாங்கியாவது பெருநாள் திடலுக்கு வரவேண்டும்’ என்று கூறியதிலிருந்து இதை நாம் உணரலாம்.

ஹஜ் பெருநாள் தினத்தில் தொழுகை நிறைவேறிய பின்னரே உணவருந்தும் பழக்கமுடைய நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு செல்லும் முன் உணவருந்திவிட்டு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்ததால், இம்முறை எமக்கும் சுன்னத்தான வழிமுறையாகும்.

இந்த பெருநாள் தினத்தை ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி சகல, முஸ்லிம்களும் மிகவும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே பல தான தர்மங்கள் எமக்கு கடமையாக்கப்பட்டுள்ளன. அல்லது சுன்னத்தாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான கடமைகளில் மிக முக்கியமான ஒன்று ஸதகத்துல் மித்ர் என்னும் கடமையாகும்.நாம் நோற்ற நோன்பு, எமது நற்கடமைகள், எமது தொழுகைகள், தான தர்மங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும், எமது பிழைகளை தவறுகளை மன்னித்து எமக்கு ஈடேற்றம் தர இந்த நந்நாளில் இருகரமேந்தி பிரார்த்திப்போம் ஆமீன். அனைவருக்கும் இனிய ஈதுல் பிதர் நல்வாழ்த்துக்கள்.

 

பேராசிரியர், மௌலவி

எம்.எஸ்.எம். ஜலால்தீன்  

முன்னாள் பீடாதிபதி தென் கிழக்குப் பல்கலைக்கழகம்  

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT