Monday, May 20, 2024
Home » ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம்

ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம்

by damith
April 8, 2024 10:25 am 0 comment

ஆறு, கடல், குளம், வயல், மரச்சோலைகள் போன்ற இயற்கையினால் சூழப்பட்டு படுவான்கரை எழுவான்கரையை இணைக்கும் மத்திய நிலையமாக விளங்கும் களுவாஞ்சியூரில் கடற்கரை வீதியில் பன்னெடுங்காலமாக வீற்றிருந்து வேண்டுவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையாரின் வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனி வளர்பிறை சதுர்த்தி நாளை தீர்த்த நாளாகக்கொண்டு 06.04.2024 ம் திகதி வாஸ்து சாந்தியுடன் 07.04.2024ம் திகதி ஆரம்பமாகியது. இவ்வுற்சவம் அலங்கார உற்சவத்துடன் ஆரம்பித்து 11.04.2024ம் திகதி அன்று விஷேட சங்காபிஷேகத்துடன் அலங்கார உற்சவமும் நடைபெற்று 12.04.2024 ம் திகதி அதிகாலை பங்குனி வளர்பிறை சதுர்த்தி தினத்தில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவுறும். அன்று திருப்பொன்னூஞ்சல் நிகழ்வும் இடம்பெறும்.

தெய்வத்திரு சிவஸ்ரீ பஞ்சாச்சரக்குருக்கள், புவனேசராசா குருக்கள் ஆகியோரின் அருளாசியுடன் சிவஸ்ரீ.சு.கு.விநாயகமூர்த்தி குருக்களினதும் சிவஸ்ரீ க.கு.மோஹானந்த குருக்களினதும் நல்லாசிகளுடன் பிரதம குருவாக சிவஸ்ரீ பு.கு.சடாட்சர சர்மா (களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம் மற்றும் வம்மியடி பிள்ளையார் ஆலயம்) உதவிக்குருவாக சிவஸ்ரீ.உ.மதுசூதனன் சர்மாவும் (ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலயம்) சிறப்பான முறையில் அலங்கார உற்சவத்தை நடாத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பரிபால சபையினர் முன்னெடுத்துள்ளனர்

அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய தோற்றமானது முதல்முதலில் கணபதி ஐயரால் ஆரம்பித்து வழிபட்ட ஆலயம் ஆகும். இவர் மரப்பொந்து ஒன்றிலிருந்து கல்வடிவத்தில் விநாயகரை கண்டெடுத்திருந்தார். அக்கல்லினை வைத்து வழிபட்டபோது அச்சிலைக்கல்லானது களவாடப்பட்டதினால் கணபதி ஐயர் மிகுந்த கவலை கொண்டு இருந்தார்.

அவ்வேளை விநாயகர் அவரின் கனவில் தோன்றி கவலைப்பட வேண்டாம். மூன்று கல்லை வைத்து என்னை எண்ணி வழிபடு நான் உன்னுடன்தான் இருப்பேன் எனக்கூறியதற்கு அமையவே கணபதி ஐயர் வம்மிமரப்பொந்தில் வைத்து வழிபட்டு வந்ததாக பழம்பெரும் கதைகள் சித்தரிக்கின்றன. வம்மிமரப் பொந்தில் வைத்து வழிபட்டதனாலே இவருக்கு வம்மியடிப்பிள்ளையார் எனப் பெருநாமம் பெற்றமையாகும்.

கோயில் அமைந்திருந்த இடமானது மூதுரைச் சேர்ந்த வா மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான காணியாகும். எனவே இவருடைய வளவிற்குள்ளேயே கணபதி ஐயர் விநாயகரின் வழிபாடு மேற்கொண்டிருந்தார். கணபதி ஐயர் சமாதிநிலையை அடைந்ததும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே அவரின் சாமாதி உடலானது கோவில் அமைந்திருந்த இடத்திலேயே புதைக்கப்பட்டது. அச்சமாதியானது தற்போதும் ஆலயத்தில் காணப்படுவதும் பூசை நடைபெறுகின்ற போது அச்சமாதிக்கும் பூசைசெய்து வழிபடுவதும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் தொன்மைமிக்க வரலாற்றை செப்பி நிற்கின்றன

கணபதி ஐயரின் மறைவிற்குப்பின்னர் அக்கோவிலின் மூலஸ்தான மண்டபமானது சாமித்தம்பியால் அமைக்கப்பட்டிருந்ததுடன் வெளிமண்டபமானது வைரவர் கோயில்கள் யாவும் முருகுப்பிள்ளையால் அமைக்கப்பட்டது இவர்கள் கணபதி ஐயரின் வழி வந்தவர்களே.

இவ்வாலயம், பன்னெடுங்காலமாக கட்டிடமாகவே காணப்பட்டது 1978 ஆம் ஆண்டு சூறாவளி அனர்த்தம் காரணமாக சிறுசேதத்திற்கு உட்பட்ட போது கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. இக்கோயிலை பெரிதாக புனரமைக்கும் நோக்கில் தா. நமசிவாயத்தால் நிதியொழுங்கு செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தை சார்ந்த குடும்ப அங்கத்தவர்களால் நிதியுதவிகள் செய்ததுடன் 2006ஆம் ஆண்டில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அங்கு இரண்டு ஆலயங்கள் மாத்திரமே அமைக்கப்பட்டிருந்தன. அதாவது ஆதிமூலப் பிள்ளையார் கோயில் மற்றயது புதிதாக அமைக்கப்பட்ட பிள்ளையார் கோயில் ஆகும். இதன் பின்னர் வைரவர் கோயில் அமைக்கப்பட்டதுடன் தற்போது (2022) மேலதிகமாக வசந்த மண்டபமும் மற்றும் நாகலிங்கேஸ்வரர் ஆலயம், நவக்கிரக கோயில், சிவன், உமை போன்றோருக்கும் கோவிலமைக்கப்பட்டது.

இக்கோயிலின் ஆரம்பகாலத்தில் இருந்து தற்போது வரைக்குமான பூசகர்களை நோக்குகின்றபோது முதலில் கண்பதிஐயர், பஞ்சாட்சரக்குருக்கள், சுப்பிரமணியக் குருக்கள், மு. பத்மநாதன்குருக்கள் (சின்னவன் குருக்கள்) , முருகுப்பிள்ளைக் குருக்கள், ஜெகதீஸ்வரன் குருக்கள் அதன் பின் சபாநாயகம் குருக்கள் என கடமையாற்றி தற்போது பஞ்சாச்சரக்குருக்களின் பேரனும் புவனேசராசாக்குருக்களின் மகனாகிய சடாச்சர சர்மாவும் சேவையாற்றி வருகின்றார்.

பக்தர்கள் எக்காரியத்தை ஆரம்பிப்பதனாலும் வம்மியடிப்பிள்ளையாரின் நம்பிக்கை கொண்டு தேங்காய் நேர்த்தி வைத்து ஆதிகாலமாக வழிபட்ட ஆலயத்தின் முன்னே கட்டுவார்கள். மற்றும் காசி நேர்த்தி வைத்து கட்டுவார்கள் கருவறைக்குப் பின்புறமாக கல் நேர்த்தி வைத்து வழிபடுவார்கள். இவைகள் யாவும் தாங்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு நேர்த்தி வைத்து வழிபடுகின்றனர். இதன் சிறப்பாக பக்தர்களுகெல்லாம் ஸ்ரீ வம்மியப்பிள்ளையாரின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

நாராயணபிள்ளை நாகேந்திரன்
ஓய்வுநிலை அதிபர்
களுவாஞ்சிகுடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT