Tuesday, May 14, 2024
Home » கல்வியின் புதிய ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பமும் அறிவும்

கல்வியின் புதிய ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பமும் அறிவும்

- 75 ஆண்டுகளில் நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறையில் புதிய மாற்றம் வேண்டும்

by Rizwan Segu Mohideen
April 6, 2024 2:27 pm 0 comment

அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் எவ்வளவுதான் பலப்படுத்தப்பட்டாலும், நாடு உலகத்துடன் முன்னேறி மாற்றமடையாவிட்டால் அது பின்னோக்கிச் செல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் 2022 வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், சிரேஷ்ட மேற்கத்திய இசைக்குழு, சிரேஷ்ட கிழக்கு இசைக்குழு மற்றும் நடனக் குழுவினர் ஜனாதிபதியை விழா மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெற வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் 2022 இல் குறைந்த விடுமுறை எடுத்த ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.

நான்கு மாணவிகளுக்கு அவர்களின் சிறப்புத் தகுதிகளுக்காக விருதுகளையும் ஜனாதிபதி வழங்கியதுடன், கல்லூரியில் 2022 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த மாணவிக்கான “கலாநிதி சுமேதா ஜெயவீர” விருது ஜி. டி. ரனலி இமாஷா விமலரத்ன மாணவிக்கு வழங்கப்பட்டது.

அதிபர் கலாநிதி சுமேதா ஜயவீர ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாடசாலையின் விசேட அதிதிகள் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் இட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

நான் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் முடிவுகளை இன்று காணலாம். எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலப்பகுதியில் நான் இந்த சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு அருகிலேயே வாசித்தேன்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சியடைய விடாமல் திட்டமிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடிந்தது. இது போதுமானது அல்ல. இன்னும் 05 முதல் 10 ஆண்டுகள் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும்.

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் வேகமாக வளரும் சமுதாயத்தில் இணைவீர்கள். அதற்கு உங்களை தயார்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இன்றைய பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினிகள் மூலம் நவீன உலகத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது கல்வியின் புதிய ஆயுதம்.

நாம் ஒரு நாடாக அபிவிருத்தியடைய வேண்டும். அடுத்த 10-15 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். உலகத்துடன் இணைந்து நாம் இந்தப் பயணத்தில் செல்ல வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் நவீனமயமாக்கல் அவசியம்.

அதற்கு அறிவும் தொழில்நுட்பமும் தேவை. Smart Agriculture என்பது ஒரு வார்த்தை அல்ல. அதற்குத் தேவையான அறிவைப் பெற வேண்டும். மேலும், பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒரே தடவையில் கிடைக்காது. அதற்கும் அறிவு வேண்டும்.

இன்று உலகில் அரசாங்கங்களுக்கும் ஒன்லைன் நிறுவனங்களுக்கும் இடையே பெரும் இழுபறி நிலவி வருகிறது. இன்று, ஒவ்வொரு நாடும் தனது அதிகார எல்லைக்குள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் பழக்கத்தில் உள்ளது.
ஆனால் இப்போது ஒன்லைன் செயற்பாடுகளால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. ஆபாச செயல்களை கட்டுப்படுத்த முடியாததால், அதற்கான சட்டங்களைக் கொண்டு வரவேண்டியுள்ளது.

வேகமாக மாறிவரும் இந்த உலகில் அறிவை வளர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் அறிவைப் புதுப்பிக்காமல் உலகத்துடன் முன்னேற முடியாது. எனவே, அறிவைப் புதுப்பித்தல் கல்வியின் முக்கியப் பணியாகிறது. இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாகாணத்திலும் கல்விச் சபையை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். மேலும், பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவையும், அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

இன்று உலகம் செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பத்துடன் முன்னேற தயாராக உள்ளது. நாமும் அந்த அறிவைப் பெற வேண்டும். அப்போதுதான் இந்த நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற முடியும். எனவே, பாடசாலைத் பாடத்திட்டத்தில் AI தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது, AI தொழில்நுட்பத்தில் இந்தியாவை விடவும் முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது.

அதற்கான புதிய சட்டங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பசுமைப் பல்கலைக்கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக மாற்றவும் எதிர்பார்க்கிறோம். அப்போது நாட்டில் இன்னொரு புதிய பல்கலைக்கழகம் உருவாகும். மேலும், எனது உத்தியோகபூர்வ இந்தியப் விஜயத்தின் போது, சென்னை ஐஐடியின் வளாகம் ஒன்றை நம் நாட்டிற்கு வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மேலும், குருநாகல், சீதாவக்க மற்றும் மற்றுமொரு பிரதேசத்தில் மூன்று தொழிநுட்ப பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நான் நிதியை ஒதுக்கியுள்ளேன். இந்தப் புதிய தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக பல்கலைக்கழகக் கட்டமைப்பு கட்டியமைக்கப்படுகிறது.

மேலும், SLIIT Campus தொடர்ந்து அபிவிருத்தியடைந்து பல்கலைக்கழகமாக மாறும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நமக்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்க பல்கலைக்கழக கட்டமைப்பில் இந்த மாற்றம் தேவை. மேலும், பல புதிய பொறியியல் பீடங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்த பீடங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

மேலும், இயற்பியல் மற்றும் மருத்துவ பீடங்கள் நிறுவப்பட வேண்டும். மருத்துவ பீடங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், புதிய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்நாட்டின் கல்வி முறையில் புதிய மாற்றம் ஏற்பட்டால்தான் அடுத்த 75 ஆண்டுகளில் இந்த நாடு முன்னேறும். அதைச் செய்யாமல் நீங்கள் முன்னேற முடியாது. எவ்வளவுதான் பொருளாதாரத்தை பலப்படுத்தினாலும், உலகத்துடன் முன்னேறாவிடில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.

கல்வி அமைச்சர் சட்டத்தரணி சுசில் பிரேமஜயந்த, தேசிய பாடசாலை பணிப்பாளர் ஹஷினி தலகல, கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் பி. ஆர்.தேவபந்து மற்றும் பிரதி அதிபர்களான அனுபா பியதிலக மற்றும் வெணுகா கலப்பத்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர் விமலா லியனகே, முன்னாள் அதிபர்களான ஆர்.எம். ஏ.ஜயசேகர மற்றும் நந்தா டி சில்வா உட்பட ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT