Home » SLFP தலைவராக மைத்திரி செயற்பட நீதிமன்றம் தடை

SLFP தலைவராக மைத்திரி செயற்பட நீதிமன்றம் தடை

சந்திரிகாவின் முறைப்பாட்டு மனுவுக்கு இணங்க இடைக்கால தடையுத்தரவு

by Gayan Abeykoon
April 5, 2024 7:12 am 0 comment

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடை செய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவை  பிறப்பித்துள்ளது. 

மேல் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்  தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டு மனுவை பரிசீலனை செய்த பின்னரே, கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே  இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின்படி ஒரு நபருக்கு தலைவர் பதவி மற்றும் ஆலோசகர் பதவியென இரண்டு பதவிகளை வகிக்க முடியாதென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முறைப்பாட்டு மனுவில் தெரிவித்துள்ளதுடன், அந்த வகையில்  மைத்திரிபால சிறிசேன கட்சியின் யாப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக  அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது ஆவணங்களை சட்டத்தரணியொருவர் மூலமாக மனுவாக தயாரித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமென்றும்  கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கிணங்க மேற்படி

SLFP தலைவராக மைத்திரி…

வழக்கு விசாரணை முடியும்வரை பிரதிவாதி மேற்படி பதவி வகிப்பதை இடைநிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதிவாதி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் இன்றுவரை அவர் அப்பதவியை வகிப்பதாகவும்  மனுவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாகவும் அதனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளதுடன்,  அவ்விடயம் தொடர்பில் குறித்த வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

விசேட கூட்டமொன்றின் மூலம் கட்சியின் முக்கியமான மூன்று உறுப்பினர்களை அவர் விலக்கியுள்ளமை, அவரது தலைமைத்துவத்தின் கீழ் கட்சியை வீழ்ச்சியடைய செய்தமை, நம்பிக்கைக்குரிய நபராக செயற்படாமை, பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை ஆகிய விடயங்களும் அவர் தலைமை பதவியை வகிக்க பொருத்தமற்றதென்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அமில திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  இவ்வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT