Monday, May 20, 2024
Home » இலங்கைக்காக 53 சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கேற்ற அம்பலந்துவை பஸால் நைஸர்

இலங்கைக்காக 53 சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கேற்ற அம்பலந்துவை பஸால் நைஸர்

by Gayan Abeykoon
April 4, 2024 4:34 pm 0 comment

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும், பதினாறு ஆண்டுகள் இலங்கையின் தேசிய அணிக்காக 53 சர்வதேச போட்டிகளில் விளையாடியவருமான பாணந்துறை அம்பலந்துவையைச் சேர்ந்த பஸால் நைஸர் சர்வதேச உதைபந்தாட்டத்திலிருந்து சோகத்துடன் கண்ணீர்மல்க விடைபெற்றார்.

இவர் தனது தேசிய உதைபந்தாட்டத்தை ஆரம்பித்த கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வைத்து விடைபெற்றார். அவரது பங்களிப்புடன் தேசிய அணி அண்மையில் பூட்டான் நாட்டுடன் விளையாடி பெற்றுக் கொண்ட சர்வதேச வெற்றிக் களிப்புடன் அதே மைதானத்தில் சர்வதேச உதைப்பந்தாட்டத்திற்கு விடை கொடுத்தார்.

இவரது தேசிய உதைப்பந்தாட்ட ஆரம்பமும் விடைபெறலும் ஒரே மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாணந்துறை அம்பந்துவையைச் சேர்ந்த பஸால் நைஸர் தனது ஆரம்பக் கல்வியை அம்பலந்துவ இல்மா வித்தியாலயம் மற்றும் தொட்டவத்தை அல்பஹ்ரியா தேசிய பாடசாலையில் மேற்கொண்டார்.

இதன் பின்னர் உயர்கல்வியை கொழும்பு சாஹிரா கல்லூரியில் தொடர்ந்தார். இவர் 2001 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாடசாலை உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதன்முறையாக ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அல்பஹ்ரியா அணிக்காக கால்பதித்தார். அந்த ஆண்டில் சம்பியன் மகுடத்தை பாடசாலை சுவீகரிக்க முக்கிய காரணியாகவும் இவர் விளங்கினார்.  உதைபந்தாட்டத்தில் முன்கள வீரராக விளங்கிய இவர், மிக வேகமாக எதிரணி கோல்கம்பங்களை முற்றுகையிடும் சிறப்பு வீரனொருவராகவும் பிரகாசித்தார்.இலங்கையின் தேசிய அணியின் சீருடையில் தனது தேசத்துக்காக விளையாட வேண்டும் என்பது பஸால் நைஸரின் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது.

இந்த நிலையில் தனது உயர்கல்விக்காக கொழும்பு சாஹிரா கல்லூரியில் இணைந்தார். இந்த இணைவு அவரது உதைபந்தாட்ட ஆசைகளுக்கும் இலட்சியத்துக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு முஹம்மது பஸாலுக்கு உதைபந்தாட்டத் துறையில் மறக்க முடியாத வருடமாக உதயமானது. இவரது இலட்சியமாக விளங்கிய தேசத்தின் தேசிய அணியில் கால்பதிக்கும் கனவு இந்த ஆண்டில் நனவாகியது.

தனது பதினெட்டாவது வயதில் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி வீரன் என்ற இலக்கை இவர் எட்டினார். 2018/2019 காலப்பகுதியில் தேசிய உதைபந்தாட்ட அணியின் தலைவன் பொறுப்பையும் பெற்றுக் கொண்டார். இது அவரது பிறந்த இடமான பாணந்துறை அம்பலந்துவைக்கு கிடைத்த தேசிய கௌரவமாகும்.  அண்மையில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற பஸால் கலந்து கொண்ட இலங்கை_-பூட்டான் நாடுகளுக்கிடையிலான சர்வதேச போட்டியில் இலங்கை 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றிகொண்டது. அந்த வெற்றிக்களிப்புடன் பஸாலின் சர்வதேச போட்டிகள் ஓய்வும் அறிவிக்கப்பட்டது.

விளையாட்டு அணி சகவீரர்களும் ரசிகர்களும் இவரை வெகுவாகப் பாராட்டி இவரது ஓய்வை ஆசிர்வதித்தனர். இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் பஸாலுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசளிக்கப்பட்டன. உதைபந்தாட்ட சங்க தலைவர் ஜஸ்வர் உமர் பிரதான நினைவுச் சின்னத்தை கையளித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT