Home » பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பதில் தயக்கம் கூடாது!

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பதில் தயக்கம் கூடாது!

by Gayan Abeykoon
April 4, 2024 1:00 am 0 comment

மையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது’ என்று பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பு மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் பெரிதும் அதிகரித்தன. அவற்றில் பேக்கரி உற்பத்திகளின் மூலப்பொருட்களது விலைகளும் உயர்வடைந்தன. அதற்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்ந்தன.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் நாட்டின் பொருளாதாரம் கட்டம் கட்டமாக மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதோடு, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பொருளாதார ரீதியில் நாடு முன்னோக்கிப் பயணிப்பதன் பிரதிபலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இப்பிரதிபலன்கள் விலைக்குறைப்புகளாகவும், சலுகைகளாகவும், நிவாரணங்களாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் இவ்வருட சிங்கள,- தமிழ்ப் புத்தாண்டு, ரமழான் நோன்பு பெருநாள், உயிர்த்த ஞாயிறு பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளின் நிமித்தமும் பல பொருட்களின் விலைகள் நேற்றுமுன்தினம் குறைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு கோதுமைமா, பெரியவெங்காயம், பால்மா உள்ளிட்ட 09 பொருட்கள் அவற்றில் அடங்கியுள்ளன.

அதேநேரம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையும் மின்கட்டணமும் ஏற்கனவே குறைக்கப்பட்டு இருக்கின்றன.

நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்களுக்கு அமைய டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துக் கொண்டிருப்பதோடு, பணவீக்கமும் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த போது, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் அதிகரித்தன. மக்கள் நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுத்தார்கள். அப்படியிருந்தும் நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் பொறுமை காத்தார்கள்.

ஆனாலும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டுவரும் அரசாங்கம் தன் பொறுப்புக்களை மறந்து விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொருளாதாரம் மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன் முன்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அதன் பிரதிபலன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில்தான் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைப்பட்டு வருகின்றன. அப்படியிருந்தும் பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, ‘சமையல் எரிவாயுவின் விலைகள் குறைவடைந்தாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது’ என்றும் ‘எரிபொருள், மின்கட்டணம் உயர்ந்த போது பேக்கரி உற்பத்திகளின் விலைகளை நாம் அதிகரிக்கவில்லை’ என்றும் ‘கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்பட்ட போது மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டன’ என்றும் குறிப்பிட்டுள்ளமைக்கு மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ள பொருட்களில் பேக்கரி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் அடங்கியுள்ளன. அவற்றில் கோதுமைமாவும் அடங்கியுள்ளது. அவ்வாறிருக்கையில், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரது இந்த அறிவிப்பை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எரிபொருள், எரிவாயு என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் போது அனைத்துப் பொருட்களதும் விலைகளை அதிகரிக்கும் பாரம்பரியம் நாட்டில் உள்ளது. அந்த அடிப்படையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வடையவே செய்கின்றன.

ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு அமைய பேக்கரி உற்பத்திகளுக்கும் விலைக்குறைப்பை மேற்கொள்ள முடியும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. ஆனால் கொள்ளை இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படும் போது எவ்விதத்திலும் விலைக்குறைப்பை செய்யவே முடியாது. அதனை நியாயப்படுத்துவதற்கு வெவ்வேறு விதமான காரணங்கள் முன்வைக்கப்படவே செய்யும்.

ஆனால் பொருட்களின் விலைக்குறைப்புக்கு ஏற்ப அனைத்துப் பொருட்களது விலைகளும் குறைக்கப்படவும் மக்களுக்கு சலுகைகளும் நிவாரணங்களும் கிடைக்கப்பெறவும் வழிவகை செய்யப்படும். அதற்கான தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT