Sunday, May 12, 2024
Home » 8 இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு இம்மாதம் முதல் சுகாதார துவாய்

8 இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு இம்மாதம் முதல் சுகாதார துவாய்

- 4,151 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதி

by Rizwan Segu Mohideen
April 2, 2024 2:18 pm 0 comment

– 2,000 தொன் உழுந்து இறக்குமதிக்கு நடவடிக்கை
– 4 விமானங்களை குத்தகைக்கு எடுக்க அனுமதி
– மாத்தளையில் அரச வெசாக் மகோற்சவம்
– வளிச்சீராக்கிகளின் வினைத்திறனை சோதிக்க ஆய்வுகூடம்
– இவ்வார அமைச்சரவையில் 15 தீர்மானங்கள்

பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 800,000 மாணவிகளுக்கு இம்மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்தம் சுகாதார துவாய் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றையதினம் (01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 15 முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

அதற்கமைய, இலங்கையில் மொத்தம் 4 மில்லியன் பேர் பாடசாலை மாணவர்களாக இருப்பதுடன், அவர்களில் 1.2 மில்லியன் மாணவிகள் பூப்படைந்தவர்களாக் கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த மாணவியர்களில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய பாடசாலைகள், அணுகல் வசதி குறைந்த பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள் மற்றும் வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 800,000 மாணவிகளுக்கு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஆண்டுதோறும் சுகாதார துவாய் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2. இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நொத்ரா டேம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
வங்காள விரிகுடாவை அண்மித்த சமுத்திரங்கள் மற்றும் வளிமண்டலம் பற்றிய ஆய்வுக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024-2028 ஐந்து (05) ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நொத்ரா டேம் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தின் மூலம் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் கற்கைகள், ஆய்வுகள், பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள் மற்றும் பட்டப்பின் படிப்பு மாணவர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உத்தேசக் கருத்திட்டத்தின் மொத்தச் செலவாக 62,000 அமெரிக்க டொலர்கள் அமைவதுடன் அதில் 60,000 ஐக்கிய அமெரிக்காவின் நொத்ரா டேம் பல்கலைக்கழகம் மற்றும் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நொத்ரா டேம் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நொத்ரா டேம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 2568 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் அரச வெசாக் மகோற்சவம்
2568 ஆவது (2024) ஸ்ரீ பௌத்த வருடத்தின் அரச வெசாக் மகோற்சவம், 2024.05.21 தொடக்கம் 2024.05.27 வரைக்கும் வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தி, மாத்தளை மாவட்டத்தில் ‘மற்றவர் கருமத்தை கவனிப்பதை விடுத்து தன் கருமத்தை தானே கவனி’ எனும் தொனிப்பொருளில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப விழா மாத்தளை தர்மராஜ பிரிவெனாவிலும், இறுதி நிகழ்வு ஸ்ரீ சுனந்தாராம விகாரை வளாகத்திலும் நடாத்தப்படவுள்ளது.

அதற்கமைய, அரச வெசாக் மகோற்சவத்தில் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டக் கோவையைத் நடைமுறைப்படுத்தவும், 2024 மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் விலங்கறுமனைகள், மாமிச விற்பனை நிலையங்கள் மற்றும் மது விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கையில் வளிச்சீராக்கி இயந்திரங்களின் வலுசக்தி வினைத்திறனை சோதிப்பதற்கான ஆய்வுகூடத்தை தாபித்தல்
பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் (GHG) வெளியேற்றத்தைக் குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் வளிச்சீராக்கி இயந்திரங்களின் வலுசக்தி வினைத்திறனை சோதிப்பதற்கு இலங்கையில் ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக ஒத்துழைப்பு நல்குவதற்கு தென்கொரிய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

கொரிய வலுசக்திப் பணியகத்தின் நிதியிடலுடன் இக்கருத்திட்டத்தின் ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கும், மற்றும் தேவையான மனிதவளப் பயிற்சி நடவடிக்கைகளை 2024 ஆம் ஆண்டில் முடிவுறுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டைத் தெரிவித்து கொரிய அரசு மற்றும் இலங்கை அரசு கையொப்பமிடுவதற்கான பேச்சுவார்த்தைக் குறிப்பு மற்றும் நியதிகளுக்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் உடன்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இருநாடுகளுக்கிடையில் உடன்பாடுகளைத் தெரிவிக்கும் பேச்சுவார்த்தைக் குறிப்புக்கள் மற்றும் நியதிகளில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

5. உழுந்து இறக்குமதிக்கான அனுமதி பெறல்
இலங்கையில் ஆண்டுக்கான உழுந்துத் தேவை 20,000 மெற்றிக்தொன்களாக இருப்பதுடன், குறித்த உற்பத்தி சந்தைக்குக் கிடைக்கின்ற பருவகாலத்தால் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மாதங்களான ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் உழுந்துத் தட்டுப்பாடு நிலவுவதைக் காணலாம்.

அதற்கமைய, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நிலவுகின்ற உழுந்துத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கும், உழுந்து விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால், தற்போது உழுந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்கி 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் விதிக்கப்பட்டுள்ள வரிக்குட்பட்டு, அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனம், தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, மற்றும் இலங்கை ஹதபிம அதிகாரசபை ஊடாக மாத்திரம் உள்நாட்டுத் தேவைக்கான 2,000 மெற்றிக்தொன் உழுந்து இறக்குமதி செய்வதற்காக விவசாய அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. 01 MW தொடக்கம் 05 MW வரையான இயலளவு கொண்ட 09 MW சூரியஒளி மின்னழுத்தக்கல மின்னுற்பத்தி நிலையத்தை பர்லேகலவில் அமைத்தல்
7 MW சூரியஒளி மின்னழுத்தக்கல மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.05.22 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு முன்னேற்றகரமான 4 கருத்திட்ட முன்மொழிவுகளை அடையாளங் கண்டுள்ளது. அத்துடன், பெறுகை மேன்முறையீட்டுச் சபையின் விதந்துரைக்கமைய மேலுமொரு முதலீட்டாளரின் முன்மொழிவை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் 5 MW சூரியஒளி மின்னழுத்தக்கல மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான முதலீட்டாளராக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் குறித்த முதலீட்டாளர் விதந்துரை செய்யப்பட்டுள்ளார். மொத்த இயளலவு 9 MW ஆகுமாறு சூரியஒளி மின்னழுத்தக்கல மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்து, நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

7. பாராளுமன்ற அங்கீகாரத்திற்கான வர்த்தமானி அறிவித்தல்களை சமர்ப்பித்தல்
கீழ்வரும் சட்டங்களுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ளதும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள அறிவித்தல்கள்/கட்டளைகள்/ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நீதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2364/36 இலக்க 2023.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்
• 2364/37 இலக்க 2023.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்
• 2369/27 இலக்க மற்றும் 2374/19 இலக்க 2024.02.01 மற்றும் 2024.03.06 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்
• 2368/24 இலக்க 2024.01.24 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்கள் (மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி)
• 2366/34 இலக்க 2024.01.12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்
• 2361/44 இலக்க 2023.12.08 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 03/2023 இலக்க மதுவரி அறிவித்தல்கள்
• 2364/35 இலக்க 2023.12.31 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 04/2023 இலக்க மதுவரி அறிவித்தல்கள்
• 2366/33 இலக்க மற்றும் 2369/42 இலக்கங் கொண்ட முறையே 2024.01.12 மற்றும் 2024.02.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள்

8. 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 34(1) பிரிவின் கீழ் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்
2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, ஆண்டுதோறும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டியுள்ளது. விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற வீரர்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் விலங்குகளுக்கு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் வழங்கப்படுவது அறிக்கையாகியுள்ளமையால், இவ்வாண்டிலிருந்து குதிரையேற்றம் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கான தடைசெய்யப்பட்ட ஊக்குமருந்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, 2373/14 ஆம் இலக்க 2024.02.27 ஆம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தடைசெய்யப்பட்ட ஊக்கிகள் (தடைசெய்யப்பட்ட பட்டியல்) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்களின் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஒருசில தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் வகைகளை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்களுக்கான வரித் திருத்தத்தை வலுவாக்கம் செய்வதற்கு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை குறித்த சட்டத்தில் குறிப்பிட்டவாறான காலப்பகுதிக்குள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கமைய, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்களின் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கீழ்க்காணும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2360/52 ஆம் இலக்க 2023.11.30 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2365/04 ஆம் இலக்க 2024.01.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2365/84 ஆம் இலக்க 2024.01.07 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2372/06 ஆம் இலக்க 2024.02.19 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
• 2373/42 ஆம் இலக்க 2024.03.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

10. வரையறுக்கபட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கான தொழிற்பாட்டுக் குத்தகையின் கீழ் நான்கு (04) பெரிய ரக விமானங்களைக் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை வழங்கல்
வரையறுக்கபட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஐந்து (05) பெரிய ரக விமானங்களுக்கான தேவையில் இரண்டு (02) விமானங்களை இயக்கக் குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், மேலதிக விமானத்துடன் கூடிய கீழ்க்குறிப்பிட்டவாறான நான்கு (04) பெரிய ரக விமானங்களை தொழிற்பாட்டுக் குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ORIX Aviation இற்கு 06 ஆண்டுகளுக்கு மாதாந்தம் 360,000 அமெரிக்க டொலர் வாடகைக்கு இரண்டு (02) விமானங்களுக்கான ஒப்பந்தம்
• Aergo Capital Limited இற்கு 08 ஆண்டுகளுக்கு மாதாந்தம் 365,000 அமெரிக்க டொலர் வாடகைக்கு இரண்டு (02) விமானங்களுக்கான ஒப்பந்தம்

11. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) அபிவிருத்தி வேலைத்திட்டம் (BIADP) II ஆம் கட்டத்தின் 2 ஆவது படிமுறையின் கீழ் பிரதான முனையக் கட்டிடம் (MTB), பயணிகள் பாலம் இலக்கம் 02, மற்றும் பயணிகள் பாலம் இலக்கம் 03 உள்ளிட்ட கருத்திட்டங்களை அடையாளங் காணல்
2023.10.30 திகதி எட்டப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, கட்டுமான தொழில் அபிவிருத்தி அதிகாரசபையில் (CIDA) பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுமானங்களுக்கான தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக நான்கு (04) விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுவைச் சமர்ப்பித்துள்ள Access Engineering PLC இற்கு குறித்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல், மற்றும் நடைமுறைப்படுத்தல் (BOD) அடிப்படையில் சுழல்முடுக்கி கதிரியக்க மருந்து உற்பத்தி வசதியை இலங்கையில் தாபித்தல்
உள்நாட்டு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் உதவிகளுடன் சுழல்முடுக்கி கதிரியக்க மருந்து உற்பத்தி வசதியை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு 2021.03.29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல், மற்றும் நடைமுறைப்படுத்தல் (BOD) அடிப்படையில் இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விருப்பு முன்மொழிகள் (EOI) கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 05 முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கருத்திட்டக் குழ மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் அனைத்து தொழிநுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து முன்மொழிவை சமர்ப்பித்துள்ள M/s Access Engineering PLC இற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

13. எஹலபொல அரண்மனையை ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒப்படைத்தல்
2024.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, எஹலபொல அரண்மனையை ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒப்படைப்பதற்கு உரிய அனைத்துத் தரப்பினர்களுடன் கலந்துரையாடி விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் மூலம், எஹலபொல குடும்பத்தை எடுத்தியம்பும் வகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த கண்டி இராச்சியத்தின் மகிமையையும் குறித்த சூழல் பின்னணியையும் எடுத்துக்காட்டும் வகையில் இக்கட்டிடத்தில் மெழுகுச் சிலைகளுடன் கூடிய அருங்காட்சியகத்தை அமைப்பதற்கும், அதன்மூலம் குறித்த வரலாற்றுத் தகவல்களை இன்றைய சமூகத்திற்கு மிகவும் கவர்ச்சிகரமாக எடுத்துக்காட்டவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஸ்ரீ தலதா மாளிகை எஹலபொல அரண்மனையை மையமாகக் கொண்டு கருத்திட்டமொன்று உருவாக்கியுள்ளது.

அதனால், குறித்த அரண்மனையை ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒப்படைப்பது பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஹலபொல அரண்மனை மற்றும் அதற்குச் சொந்தமான காணியை அறநிலையக் காணி உறுதி மூலம் ஸ்ரீ தலதா மாளிகைக்கு ஒப்படைப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கல்
பெருந்தோட்ட மக்களுக்கு அறுதி உறுதிக் காணி வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் “பெருநதோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கல்” எனும் பெயரிலான முன்மொழிவொன்று நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.

குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையில் இல்லாத பெருந்தோட்ட தொழில் முயற்சி மறுசீரமைப்புக்கள் இராஜாங்க அமைச்சின் ஒத்துழைப்புடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட வலயத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பிராந்தி பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வாழ்கின்ற 4,151 பயனாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த குடும்பங்கள் தற்போது வசிக்கின்ற காணிக்களுக்கான அறுதி உறுதியை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. சுற்றுலாத்துறையில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக அத்தியாவசிய போக்குவரத்து வசதிகளை உருவாக்கல்
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்துகின்ற வாகனங்களின் பயன்பாட்டுக்காலம் 06 வருடங்களுக்கு மேற்படாத வகையில் இருத்தல் வேண்டுமென சுற்றுலாத் துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக இருப்பினும், வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால், சுற்றுலாத் துறையில் போக்குவரத்து வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் நிலைமைகள் மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் காணப்படாமையால், காலாவதியான வாகனங்களின் பாவனையால் முன்னணிமிக்க சுற்றுலாப் பயண இடமாக இலங்கை கொண்டுள்ள புகழுக்கு ஒருசில களங்கம் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிச் செயன்முறையில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இத்தொழிற்றுறையின் வளர்ச்சிக்குத் தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, விசேட வரிச்சலுகையை வழங்காமல் குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற 06 – 15 வரையான இருக்கைகளைக் கொண்ட 750 வேன் வண்டிகளும் (மின்னியல் மற்றும் இரட்டைரக வண்டிகள் உள்ளிட்ட), 16 – 30 வரையான இருக்கைகளைக் கொண்ட சிறியரக பேரூந்துகள் மற்றும் 30 – 45 வரையான இருக்கைகளைக் கொண்ட பேரூந்துகள் 250 இனையும் இறக்குமதி செய்வதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT