Monday, May 20, 2024
Home » சித்திரையின் சிறப்பு

சித்திரையின் சிறப்பு

by damith
April 1, 2024 6:00 am 0 comment

தமிழர்களைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அப்படிப்பட்ட குறிப்புகளில் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன. இடைக்காட்டுச் சித்தர் அவர்கள் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின் பற்றி வருகிறோம். அவரும் சித்திரை தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார். உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல் திகதியன்று என்று பார்த்தோம். சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது. சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது. சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது. சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது. சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

அஸ்வினியில் தொடங்கும் சித்திரை : சித்திரைக்கு உள்ள மற்றொரு முக்கியச் சிறப்பு, அஸ்வினி நட்சத்திரத்தில் அது ஆரம்பிக்கிறது. அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் இந்த நட்சத்திரத்தின் அதிபதிகள் ஆவர். அவர்களைக் குதிரைகளாகக் கொண்டு ஒற்றைச் சக்கரத்தேரில் சூரியன் வான் மண்டலத்தில் பவனி வருகிறான் என்று ரிக் வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி நட்சத்திரத்துக்கு மருத்துவர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்துக்கு அதிபதியான அஸ்வினி தேவர்கள், தேவ மருத்துவர்கள் எனப்படுகிறார்கள்.

நம்முடைய பிறந்த நாளை நாம் பிறந்த நட்சத்திரத்தின் போது கொண்டாடுவது போல புத்தாண்டுப் பிறப்பை சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும்போது கொண்டாடுவதால், அந்த அஸ்வினி தேவர்களது அருளால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சூரியன் பல பிறந்த நாள்களைப் பெறுகிறது. இதன் முக்கியத்துவதைச் சொல்லும் ரிக் வேத ஸ்லோகம் ஒன்றுள்ளது. ‘சூரியன் அஸ்வினியில் புறப்பட்டபோது இருந்தது போல, எல்லா தெய்வங்களும் எங்களுக்கு ஆயுளைக் கொடுக்கட்டும்’ என்கிறது அந்த ஸ்லோகம். அஸ்வினியில் சூரியன் பிறந்ததால் பல கோடி வருடங்கள் சூரியன் சென்று கொண்டு இருக்கின்றான்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT