Monday, May 20, 2024
Home » முஸ்லிம்களின் சமய, சமூக, கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தவர் மௌலவி ஏ.எல்.எம் இப்றாஹீம் (கபூரி)

முஸ்லிம்களின் சமய, சமூக, கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தவர் மௌலவி ஏ.எல்.எம் இப்றாஹீம் (கபூரி)

by damith
April 1, 2024 10:24 am 0 comment

இலங்கை முஸ்லிம் சமூகம், தங்களின் சமய, சமூக மறுமலர்ச்சிக்கும் குறிப்பாக கல்வி முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்துவந்த அறிவாளுமையை இழந்திருக்கிறது. அவர் தான் பேராதனை, களனி பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளரும், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவருமான மௌலவி ஏ.எல்.எம் இப்றாஹீம் கபூரி, (எம்.ஏ) ஆவார்.

கடந்த சனியன்று காலமான இவர், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்களின் சமய, சமூக, கல்வி மறுமலர்ச்சிக்கும் அளப்பரிய சேவைகளையும் பங்களிப்புகளையும் நல்கியுள்ளார்.

ஆரவாரமற்ற முறையில் அமைதியாகவும் அடக்கமான முறையிலும் பணியாற்றி வந்த இவர், எவ்வளவு தான் வேலைப்பளுவுக்கு மத்தியில் இருந்த போதிலும் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் சிரித்த முகத்துடன் பழகும் பண்பைக் கொண்ட எளிமைமிகு ஆளுமையாக விளங்கினார்.

தமது 87 வயதில் இவ் உலகை விட்டு பிரிந்துள்ள மௌலவி இப்றாஹீம், மாவனல்லை உயன்வத்தையில் 1937 ஆம் ஆண்டு பிறந்தவராவார். நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்ற இவர், 1948 இல் கபூரிய்யா அறபுக்கல்லூரியில் இணைந்து சுமார் 9 வருடங்கள் கற்று 1957 ஆம் வருடம் அல்-ஆலிம் அல்-கபூரி பட்டத்தைப் பெற்று வெளியேறினார். அத்தோடு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியோடு தம்மை இணைத்து கொண்ட இவர், இஸ்லாமிய பணியிலும் இந்நாட்டு முஸ்லிகளின் மேம்பாட்டிலும் குறிப்பாக கல்வி முன்னேற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

இந்தப் பின்புலத்தில் 1958 இல் இவர் ஜமாஅதே இஸ்லாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தெரிவானார். அவர் கபூரிய்யாவில் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய போதிலும் அங்கு இரண்டு வருடங்கள் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1959 இல் அறபு ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்ட இவர், 1963 இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்தார்.

1968 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஜி.ஏ.கியூ. கற்கையையும் அதன் பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்ட படிப்பையும் நிறைவு செய்து முதல் தரத்தில் சித்தியடைந்தார். அதன் ஊடாக 1973 முதல் பேராதனை மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிக மற்றும் அறபு கற்கைத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அதேநேரம், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தை ஸ்தாபிக்கவென மர்ஹூம் நளீம் ஹாஜியார், அறிஞர் ஏ.எம்.ஏ அசீஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்திருந்தார். அக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராகவும் இருந்த மௌலவி இப்றாஹீம் நளீமிய்யா கலாபீடத்தின் பாடத்திட்டத்தை வரைந்த முதல் நபரும் ஆவார்.

1976 – 77 காலப்பகுதியில் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமைப் பதவியை வகித்த இவர், 1987 இல் மேற்படிப்பிற்காக சவூதி அரேபியா சென்றார். அங்கிருந்து நாடு திரும்பிய பின்னர் 1989 முதல் 1992 வரையான காலப்பகுதியிலும் இவ்வமைப்பின் அமீராக மீண்டும் பதவி வகித்தார்.

ஜமாத்தே இஸ்லாமியின் அமீராக (தலைவர்) பதவி வகித்த காலப்பகுதியில் தப்ஹீமுல் குர்ஆன் என்ற அல் குர்ஆன் விளக்கவுரையை சிங்கள மொழியில் கொண்டுவருவதற்கு முன்னோடியாக செயற்பட்ட இவர், சிங்கள மொழி மொழிபெயர்ப்புடன் அல்-குர்ஆனையும் அதே போன்று அல் குர்ஆன் விளக்கவுரையையும் வெளிக்கொணரவும் அயராது உழைத்தார்.

மேலும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக ஆரம்பம் முதல் அளப்பரிய பங்களிப்புக்களைய நல்கியுள்ள இவர்,

மாதம்பை இஸ்லாஹிய்யா ஆண்கள் கல்லூரி, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி, மாவனல்லை ஆயிஷா சித்தீகா மகளிர் கல்லூரி, ஒட்டமாவடி பாத்திமதுஸ் ஸஹ்ரா கல்லூரி என்பவற்றின் ஸ்தாபக முன்னோடி உறுப்பினராக விளங்குகிறார். அத்தோடு சிங்கள மொழி மூலமான முதலாவது இஸ்லாமிய கற்கை நிறுவனமான தன்வீர் அகடமியின் ஸ்தாபகரும் ஆவர் இவர். இவை மாத்திரமல்லாமல் நிகவெரட்டிய அமீனிய்யா அறபுக் கல்லூரி, ஹெம்மாதகம தாருல் ஹஸனாத் கல்லூரி என்பவற்றின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பும் வழிகாட்டல்களும் இருந்துள்ளன.

அதேவேளை தமது பல்கலைக்கழக ஆசிரியப் பணியின் போது ஆற்றல்களும், அறிவும் நிறைந்த பல புத்திஜீவிகளின் உருவாக்கத்திற்கு பங்களிப்புக்களை நல்கியுள்ள இவர், பெண்களுக்கான கல்வியை நவீன மயப்படுத்துதல், ஆங்கிலம், நவீன தொழில் நுட்பம் உடையதாக அதை மாற்றியமைத்தல், முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மொழியான சிங்கள மொழியில் பரீட்சயம் கொண்ட மார்க்க அறிஞர்களை உருவாக்குதல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை மிகவும் ஆளுமையும், ஆற்றலும் கொண்டதாக மாற்றுதல் எனப் பல மட்டங்களிலும் தம் பங்களிப்புக்களை அளித்துள்ளார். அதேநேரம், திஹாரியில் அமைந்துள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக விளங்கியுள்ள இவர், சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச இஸ்லாமிய இளைஞர் அமைப்பினதும் குவைத் சர்வதேச இஸ்லாமிய நலன்புரி அமைப்பினதும் ஸ்தாபக உறுப்பினருமாவார்.

அத்தோடு பல சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களிலும் மாநாடுகளிலும் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள இவர், ஒரு அறிஞராகவும் புத்திஜீவியாகவும் கல்விமானாகவும் மாத்திரம் இருந்துவிடாது ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் தான் பெற்றுக்கொண்டுள்ள அறிவை அமுலாக்கம் செய்வதில் மிகப் பெரும் செயல் வீரராகவும் திகழ்ந்துள்ளார். அன்னாரின் சேவைகளும் பணிகளும் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதிக்கும் என்பதில் ஐயமில்லை. பிரதியுபகாரம் எதிர்பாராது நாட்டினதும் குறிப்பாக முஸ்லிம்களதும் சமய, சமூக, கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய பங்களிப்புக்களை நல்கியுள்ள இப்றாஹீம் மௌலவியின் தவறுகள் மன்னிக்கப்பட்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயரிய சுவர்க்கம் அவருக்கு கிடைக்கப் பெற்றிட இறைவனிடம் பிரார்த்திப்பது சமூகத்தின் பொறுப்பாகும்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT