Monday, May 20, 2024
Home » யாழ். குடாநாட்டில் ஆரோக்கிய பவனியும் தூய்மையாக்கலும் விழிப்புணர்வும் முன்னெடுப்பு
அனைத்துலக சுழியக் கழிவு தினம்:

யாழ். குடாநாட்டில் ஆரோக்கிய பவனியும் தூய்மையாக்கலும் விழிப்புணர்வும் முன்னெடுப்பு

by damith
April 1, 2024 10:18 am 0 comment

அனைத்துலக சுழியக் கழிவு தினமான (International Zero waste Day) மார்ச் 30 ஆம் திகதி(நேற்று) சிகரம் நிறுவனத்தின் படலை வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் தலைமையில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் நடைபெற்றது.

இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை, யாழ் பிரதேச செயலகம், யாழ் பொலிஸாரின் நேரடிப் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் கீழ், யாழ் நகரின் பிரதான வீதிகள் சிலவற்றின் ஊடாகவும், யாழ்ப்பாணத்தின் சுற்றுலா ஈர்ப்பு வலயமாக காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரம் முதல் பண்ணை சுற்றுவட்டம் வரையிலான பகுதியிலும் தூய்மைக்கல் பணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பொலிஸ் நிலையம், துரையப்பா விளையாட்டரங்கப் பகுதி மற்றும் யாழ் ஆரியகுளம் சந்திப் பகுதியில் காலை 7 மணியளவில் ஏக காலத்தில் ஆரம்பித்த இப்பணி, 3 வீதிகள் ஊடாக யாழ் பண்ணைப் பகுதி வரையில் மேற்கொள்ளப்பட்டது.

யாழ். பொலிஸ் நிலையப் பகுதியில், சிகரம் – படலை வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் யாழ் ஆரோக்கிய கழக யோகாசன பயிற்சியாளர் மற்றும் பிரித்தானிய விருந்தோம்பல் கற்கை நிறுவன தலைவர், மாணவர்களின் பங்கேற்புடன், யாழ் பொலிஸாருடன் இணைந்து, சிகரம் படலை நிறுவனத் தலைவர் கோ. றுஷாங்கன் தலைமையில் தூய்மையாக்கல் பணி ஆரம்பிக்கப்பட்டது.

ஏக காலத்தில், யாழ் ஆரியகுளம் சந்திப் பகுதியில், இந்தியத் துணைத் தூதுவர், யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோரின் தலைமையில், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பிரணவநாதன், யாழ் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஆரோக்கிய பவனி தூய்மையாக்கல் பணியை ஆரம்பித்த வைத்தனர்.

இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையிலான இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் குழுவினர் சைக்கிள் பவனியாக வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக பண்ணை பகுதியை அடைந்து, பண்ணைப் பாலத்தின் ஊடாக மண்டைதீவு வரையில் பவனியாக சென்று திரும்பினர். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கோட்டை பின்பகுதியை தூய்மையாக்கும் பணியில் துணைத்தூதுவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

யாழ். மாநகர சபை ஆணையாளர் தலைமையில் ஆரியகுளத்திலிருந்து புறப்பட்ட ஒரு அணியினர் ஆரியகுளம் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியூடாக வைத்தியசாலை வீதியை அடைந்து, அங்கிருந்து மகாத்மா காந்தி வீதியூடாக, மணிக்கூட்டுக் கோபுரம், பொது நூலகம், துரையப்பா விளையாட்டரங்கு, யாழ் கோட்டை, பண்ணை நடைபாதை ஊடாக பண்ணைச் சுற்றுவட்டத்தை அடைய, இரண்டாவது அணி, ஆரியகுளம் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதியூடாக முட்டாசு கடைச் சந்தியை அடைந்து, கே.கே.எஸ். வீதியூடாக, தபால் கந்தோர் சந்தியைக் கடந்து சுற்றுவட்ட வீதியூடாக பண்ணைச் சுற்றுவட்டத்தை அடைந்தனர்.

மூன்றாவது அணி, யாழ் மாநரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி பிரவினரின் தலைமையில் பிரதான வீதி தண்ணீர் தாங்கி பகுதியிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வீதியூடாக பண்ணை சுற்றுவட்டத்தை அடைந்தனர்.

பண்ணை சுற்றுவட்டப் பாதையை அனைத்து அணிகளும் வந்தடைந்ததும், காலை 8.30 மணியளவில ரில்கோ உல்லாச விடுதியினரின் ஏற்பாட்டில் தாகசாந்தி வழங்கப்பட்டதுடன், விசேட கலந்துரையாடல் மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

சிகரம் – படலை வடக்கு மாகாண சுற்றுலா சேவைப் பிரவின் தலைவர் கோ. றுஷாங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ் மாநகர ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், இந்தியத் துணைத் தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.

மாநகர சபையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், ஜெற்விங் மற்றும் ரில்கோ உல்லாச விடுதிகளின் உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT