Monday, May 20, 2024
Home » இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் மறுபரிசீலனை

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் மறுபரிசீலனை

by Rizwan Segu Mohideen
March 31, 2024 2:29 pm 0 comment

பிரதமர் மோடியின் பூட்டான் விஜயத்தின் போது, இரு தலைவர்களும் பூட்டானின் நீர்மின் துறையின் வளர்ச்சியிலும், அப்பகுதிக்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதிலும் தூய்மையான எரிசக்தி கூட்டாண்மையின் பங்களிப்பை சுட்டிக்காட்டியதாக இந்தியா – பூட்டான் எரிசக்தி கூட்டாண்மை பற்றிய கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மதிப்பாய்வு செய்தனர். மேலும் 1200 MW புனட்சாங்சு-I நீர்மின்சாரத் திட்டம் குறித்த நிபுணர் மட்ட ஆராய்வை அவர்கள் வரவேற்றனர். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் 1020 MW புனட்சாங்சு நீர் மின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் பூட்டான் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் உள்நாட்டு திறன் அதிகரித்து வருவதை பிரதமர் மோடி பாராட்டினார்.

அண்மைய ஆண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காகவும், சர்வதேச சோலர் கூட்டணி மற்றும் இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் போன்ற முன்முயற்சிகளை வளர்ப்பதில் அவரது தலைமைத்துவத்திற்காகவும் பூட்டான் பிரதமர் டோப்கேயும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்த இரு தலைவர்களும், கூட்டாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு பூட்டானில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாக திருப்தி தெரிவித்தனர்.

“720 MW திறன் கொண்ட மாங்டேச்சு நீர்மின்சாரத் திட்டத்தின் வெற்றியை அடுத்து, 1020 மெகாவோட் திறன் கொண்ட புனட்சாங்சு-II நீர் மின்சாரத் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்குவதற்கு இரு தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர். 1200 MW புனட்சாங்சு-I திட்டத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக சிறந்த மற்றும் செலவு குறைந்த வழி குறித்த நிபுணர் மட்ட குழுவின் சாதகமான ஆராய்வை இரு தரப்பினரும் வரவேற்றனர், ”என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏற்றுமதி வருவாயை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை மற்றும் நிதித் திறன்களின் மேலும் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதன் மூலம் இந்தியா-பூட்டான் எரிசக்தி கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் திறன் கொண்டது என்பதை பிரதமர் மோடி மற்றும் பிரதமர் டோப்கே ஒப்புக்கொண்டனர்.

புதிய எரிசக்தி திட்டங்கள் மற்றும் மின்சார வர்த்தகத்தின் வளர்ச்சி உட்பட, பரஸ்பர நன்மை பயக்கும் இந்த இருதரப்பு எரிசக்தி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இரு தலைவர்களும் நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் புதிய ஆற்றல் திட்டங்களை மேம்படுத்துவதில் ஈடுபட ஒப்புக்கொண்டனர்.

பூட்டானில் புதிய மற்றும் எதிர்கால நீர் மின் திட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து தேவையான நிதியுதவி மற்றும் மின்சார விற்பனைக்கான சந்தையை இந்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பிராந்தியத்தில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு நாடுகளுக்கு இடையேயான மின் பரிமாற்றம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி மற்றும் பிரதமர் டோப்கே ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

இந்தியாவும் பூட்டானும், வளர்ந்து வரும் எரிசக்தி சந்தைகளைக் கருத்தில் கொண்டு, பூட்டானின் ஆற்றல் திட்டங்களில் முதலீடுகளை செயல்படுத்தவும், மின்சாரத்தில் தடையற்ற எல்லை தாண்டிய வர்த்தகத்தை உறுதி செய்யவும் ஆலோசனைகளை நடத்தும்.

பிரதமர் மோடி மார்ச் 22 முதல் 23 வரை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டானுக்கு சென்றிருந்தார்.

பூட்டானில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க பெருந்திரளான மக்கள் வந்திருந்ததோடு மக்களிடமிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு பூட்டானின் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுப் பிரமுகர் மற்றும் நான்காவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அவர் திம்புவில் உள்ள தாஷிச்சோ டிசோங் அரண்மனையில் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்தார்.

பிரதமர் மோடி பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கேயுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார் . இரு தலைவர்கள் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. (ANI)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT