Monday, April 22, 2024
Home » நாட்டினதும் மக்களினதும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியம்

நாட்டினதும் மக்களினதும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியம்

by sachintha
March 26, 2024 6:00 am 0 comment

இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் முகம்கொடுத்தது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையோடு ஆரம்பமான இப்பொருளாதார நெருக்கடி நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியது.

அச்சந்தர்ப்பத்தில் நாட்டின் ஆட்சியாளர்களாக இருந்தவர்களால் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணவோ, இந்நெருக்கடியினால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்கவோ முடியவில்லை. அதனால் பொருளாதார நெருக்கடியின் விளைவான தாக்கங்களும் பாதிப்புக்களும் நாளுக்குநாள் அதிகரித்துச் சென்றன. அந்தத் தாக்கங்களுக்கு முகம்கொடுக்க முடியாத கையறு நிலைக்கு மக்கள் உள்ளானார்கள்.

குறிப்பாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை தோற்றம் பெற்றது. அனைத்துப் பொருட்களதும் விலைகள் பெரிதும் அதிகரித்துக் காணப்பட்டன. தினமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்பட்டது. இவ்வாறான சூழலில் உல்லாசப் பயணிகளின் வருகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடியினால் நாளுக்குநாள் நாடு சரிவடைந்து அதல பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குத் தீர்வு வழங்க முடியாத நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் முகம்கொடுத்தார்கள். அதனால் அவர்கள் ஆட்சியை விட்டு விலகினர்.

அன்றைய ஆட்சியை மாற்றியமைக்க வித்திட்ட இப்பொருளாதார நெருக்கடியானது, ஆட்சியைப் பிடிப்பதற்காக போட்டியிடும் கட்சிகளையோ அவற்றின் தலைவர்களையோ நாட்டின் தலைமையை ஏற்கத் துணிய இடமளிக்கவில்லை. அச்சமயத்தில் ஒவ்வொரு கட்சியும் அவற்றின் தலைவர்களும் மக்களினதோ நாட்டினதோ நலன்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை. மாறாக தங்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்தே அவர்கள் சிந்தித்து செயற்படலாயினர்.

இவ்வாறான இக்கட்டான நிலையில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அவ்வேலைத்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைச் சாத்தியமானவையாகவும், மக்களுக்கு மேலும் சுமையாக அமையாதவையாகவும் அமைந்திருந்தன.

அதனால் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் பாதிப்புக்களும் குறுகிய காலம் முதல் நீங்கத் தொடங்கின. குறிப்பாக எரிபொருள், எரிவாயுக்கான வரிசை யுகம் முடிவுக்கு வந்ததோடு, போக்குவரத்து சேவைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பின. அத்தோடு நாட்டின் அனைத்துத் துறைகளிலும் மக்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கைகள் ஏற்பட்டன. பொருளாதாரமும் நம்பிக்கை தரும் வகையில் மீட்சி பெற்று மறுமலர்ச்சி பாதையில் பிரவேசித்திருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களுக்கு அமைய மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் பாதிப்புக்களும் முழுமையாக நீங்கியதாக இல்லை. அவற்றின் செல்வாக்கு காணப்படவே செய்கிறது. ஆனாலும் இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் பின்னரான வரலாற்றில் முன்னொருபோதும் சந்தித்திராத பொருளாதார நெருக்கடிக்கு இந்நாடு உள்ளான போதிலும் குறுகிய காலப்பகுதியில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நாடு மீட்சி பெற்றிருப்பதற்கு ஜனாதிபதி அளித்துவரும் தலைமையே அடிப்படைக் காரணமாகும். இதனையிட்டு உலகத் தலைவர்களே ஜனாதிபதியை பாராட்டியுள்ளனர்.

அதனால் இந்நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறுவதற்கு இதே தலைமையும் இந்த வேலைத்திட்டங்களும் தொடர வேண்டும் என்பது தான் நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்ட அனைவரதும் கருத்தாகும்.

இவ்வாறான சூழலில் நாடு இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாகக் கையாளக் கூடியவரிடம்தான் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதைவிடுத்து அன்றைய நெருக்கடியின் போது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கத் தவறியவர்களிடம் அல்ல என்பதே மக்களது அபிப்பிராயமாகும்.

இந்நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ‘பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதால் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாகக் கையாளும் திறமை படைத்தவர்களே ஆட்சிக்கு வர வேண்டும்’ என்றுள்ளார்.

அதுதான் உண்மை. நாட்டினதும் மக்களினதும் பொருளாதார சுபீட்சத்தைக் கருத்தில் கொண்டவர்களால் தான் நாட்டைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பதே இன்றைய தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT