Home » விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகின்றது

விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகின்றது

by sachintha
March 26, 2024 6:13 pm 0 comment

இளைஞர்களுக்கு விளையாட்டுகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் தீயவழியில் செல்லக்கூடிய நிலைமை அதிகளவில் காணப்படுவதாகவும் இராஜங்க அமைச்சர் காதர் மஸ்தான்​ தெரிவித்தார்.

மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளை கௌரவிக்கும் நிகழ்வு துள்ளுக்குடியிருப்பில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மன்னார் மாவட்டத்திலிருந்து தேசிய அணிகளுக்கு தெரிவாகுவது குறைவடைந்து செல்வதை அவதானிக்கமுடிகின்றது.

இவற்றை ஈடு செய்யும் நோக்குடன் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுவது சிறப்பான விடயமாகும்.

கடந்த காலத்தைப்போல் அல்லாது இப்பொழுது விளையாட்டில் கவனம் செலுத்துவோர் குறைந்து செல்லுகின்றனர்.

ஆகவே இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் இவ்வாறான போட்டிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.

இப்பொழுது இளைஞர்கள் தீய வழிகளுக்கு செல்லக்கூடிய நிலைகள் காணப்படுகின்றன.

அத்துடன் விளையாட்டுக்களில் ஊக்கமாக இருந்தவர்கள் சாதனை படைத்தவர்களை மறக்காது அவர்களையும் இன்றைய நாளில் நினைவு கூர்ந்து கௌரவப்படுத்துவது மிகவும் பெருமையாக இருக்கின்றது.

இப்போட்டிகளில் மூன்று அணிகள் வெற்றியாளர்களாக காணப்பட்டாலும் ஏனையவர்களின் முயற்சி தொடருமாகவிருந்தால் எதிர்காலத்தில் அவர்களும் இந்நிலைக்கு வர சந்தர்ப்பம் உண்டு என்பதை மறக்கக்கூடாது.

ஏனென்றால் உங்களுக்கும் தேசிய மட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் நிச்சயம் உருவாகும் என்பதை மறக்கக் கூடாது.

உடற்பயிற்சிகள் தற்பொழுது குறைந்து செல்வதால் பலருக்கு சிறுவயது தொடக்கம் நோய்கள் ஏற்பட்டு வருவதை காண்கின்றோம்.இங்கு விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு விரைவில் இதற்கான அமைச்சரை அழைத்து வந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

தலைமன்னார் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT