Monday, May 20, 2024
Home » தனஞ்சய – கமிந்து இணைப்பாட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது இலங்கை அணி

தனஞ்சய – கமிந்து இணைப்பாட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது இலங்கை அணி

by Rizwan Segu Mohideen
March 23, 2024 7:47 am 0 comment

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸின் இரட்டைச் சத இணைப்பாட்டத்தின் உதவியோடு பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 280 ஓட்டங்களை பெற்று சரிவில் இருந்து மீண்டது.

ஆரம்பத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையிலேயே தனஞ்சய மற்றும் கமிந்து கைகொடுத்தனர்.

சில்ஹெட்டில் நேற்று (22) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித் தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

ஷான்டோவின் முடிவை நியாயப்படுத்தும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் காலித் அஹமட் போட்டியில் இரண்டாவது ஓவரிலேயே இலங்கையின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். 2 ஓட்டங்களுடன் இருந்த நிஷான்த பீரிஸின் துடுப்பில் பட்டுச் சென்ற பந்தை மூன்றாவது ஸ்லிப் திசையில் இருந்த மஹிதி ஹசன் பிடித்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டபோதும் மீண்டும் செயற்பட்ட காலித் 16 ஓட்டங்களுடன் இருந்த குசலின் விக்கெட்டை சாய்த்தார்.

அடுத்த நான்காவது பந்தில் 17 ஓட்டங்களுடன் இருந்த திமுத் கருணரத்னவையும் போல்ட் செய்வதற்கு காலிதால் முடிந்தது.

பின்னர் அனுபவ வீரராக அஞ்சலோ மத்தியூஸ் 5 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆக தினேஷ் சத்திமாலினால் 9 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் இலங்கை அணி 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

எவ்வாறாயினும் 6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்சய மற்றும் கமிந்து சற்று வேகத்துடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை சேகரித்தனர். பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் மோசமான பந்துகளுக்கு இருவரும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை எடுத்தனர்.

இதன்போது தனஞ்சய டி சில்வா டெஸ்ட் போட்டிகளில் தனது 11 ஆவது சதத்தை பெற்றதோடு அவர் 131 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 102 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்ற கமிந்து மெண்டிஸ் 127 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 102 ஓட்டங்களை பெற்றார்.

இருவரும் 6 ஆவது விக்கெட்டுக்கு 202 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். எனினும் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழந்த பின்னர் இலங்கை மீண்டும் சரிவை சந்தித்தது. அவர் ஆட்டமிழந்த விரைவிலேயே தனஞ்சய டி சில்வாவும் வெளியேறினார். கடைசி வரிசை விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோக இலங்கை அணி 68 ஓவர்களில் 280 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 259 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் மேலும் 21 ஓட்டங்களை பெறுவதற்குள் எஞ்சிய 5 ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில் காலித் அஹமட் மற்றும் நாஹித் ரானா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் நேற்று தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தனது முதல் இன்னிஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 32 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித்த 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT